×

கேரளாவில் இருந்து துபாய்க்கு மாடல் அழகிகளை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்: 3 பெண்கள் கைது

 

திருவனந்தபுரம்: பேஷன் ஷோ நடத்துவதாக கூறி கேரளாவில் இருந்து மாடல் அழகிகளை துபாய்க்கு அழைத்துச் சென்று ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு மாடல் அழகி உள்பட 3 இளம்பெண்களை கொச்சி போலீசார் கைது செய்தனர்.

கொச்சியை சேர்ந்த 28 வயதான மாடல் அழகியும், அழகுக்கலை நிபுணருமான ஒரு இளம்பெண் கொச்சி மரடு போலீசில் கடந்த மாதம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்த விவரங்கள் வருமாறு: சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் துபாயில் நடைபெற உள்ள ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்க மாடல் அழகிகள் தேவை என்று விளம்பரம் வந்திருந்தது. எனக்கு துபாய் செல்ல விருப்பம் இருந்ததால் நான் அதற்கு விண்ணப்பித்தேன்.

சில நாட்கள் கழித்து அலீனா ஆபிரகாம் என்பவர் என்னை தொடர்பு கொண்டார். சில நாட்களுக்குப் பின் என்னை அவர் துபாய்க்கு அனுப்பி வைத்தார். அங்கு ஒரு ஓட்டலில் எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஓட்டலுக்கு சென்ற பின்னர் அங்கிருந்த ஒருவர் எனக்கு குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்தார். அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே நான் மயக்கமடைந்தேன். பல மணிநேரம் கழித்துத் தான் எனக்கு மயக்கம் தெளிந்தது. அப்போதுதான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன்.

மயக்கத்தில் இருந்தபோது என்னை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் ஆபாச வீடியோவும் எடுத்துள்ளனர். அதைக் காண்பித்து மிரட்டி என்னை பலருக்கு விருந்தாக்கினர். 2 மாதங்களுக்கு மேல் நான் பல கொடுமைகளை அனுபவித்தேன். அதிர்ஷ்டவசமாக நான் அந்தக் கும்பலிடமிருந்து தப்பி ஊருக்கு வந்துவிட்டேன். அவர்களிடம் என்னைப் போல மேலும் பல இளம்பெண்கள் சிக்கியுள்ளனர். இவ்வாறு அந்த மாடல் அழகி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் திருவனந்தபுரம் போங்குவிளை பகுதியைச் சேர்ந்த மாடல் அழகியான அலீனா ஆபிரகாம் (29), இவருக்கு உடந்தையாக இருந்த குருவாயூரை சேர்ந்த டோய்சி சிந்து (50), மலப்புரம் மாவட்டம் பொன்னானியை சேர்ந்த மஞ்சிமா (33) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் துபாயில் உள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் கொச்சி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kerala ,Dubai ,Thiruvananthapuram ,
× RELATED இந்திய ராணுவ நிலைகளை லைவில்...