* இனி தினசரி மாற்றியமைக்க முடிவு
சேலம்: நாடு முழுவதும் 3 ரூபாய் விலை உயர்ந்த 3 நாள் இடைவெளியில் நேற்று காலை, பெட்ரோல், டீசல் விலையை 80 காசு முதல் ரூ.1.11 வரையில் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்தது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், இவ்விலை நிர்ணயத்தை இனி தினசரி மாற்றியமைக்கும் முடிவை பின்பற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் போரை காரணம் காட்டி கடந்த மார்ச் 7ம் தேதி 14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.60ம், மே 1ம் தேதி 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூ.998ம் அதிகரிக்கப்பட்டது.
இதன்பின், கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 அதிரடியாக உயர்த்தினர். இவ்விலையேற்றம் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்தநிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை நேற்று காலை (19ம் தேதி) மீண்டும் உயர்த்தி எண்ெணய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொடர் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை 80 காசு முதல் ரூ.1.11 வரையில் உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67ல் இருந்து 82 காசு உயர்ந்து ரூ.104.49 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.25ல் இருந்து 86 காசு உயர்ந்து ரூ.96.11 ஆகவும் உயர்ந்துள்ளது. இது சேலத்தில் பெட்ரோல் 104.50ல் இருந்து ரூ.105.32 ஆகவும், டீசல் ரூ.96.12ல் இருந்து ரூ.96.98 ஆகவும் அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை நேற்று 87 காசு உயர்ந்து ரூ.98.64 ஆகவும், டீசல் 91 காசு உயர்ந்து ரூ.91.58 ஆகவும், மும்பையில் ெபட்ரோல் 91 காசு உயர்ந்து ரூ.107.59 ஆகவும், டீசல் 94 காசு உயர்ந்து ரூ.94.08 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.1 உயர்ந்து ரூ.109.70 ஆகவும், டீசல் 94 காசு உயர்ந்து ரூ.96.07 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.112க்கும், டீசல் ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகிறது. 3 நாள் இடைவெளியில் மீண்டும் பெட்ேரால், டீசல் விலையை ரூ.1 வரை ஒன்றிய பாஜ அரசு உயர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பால், காய்கறி, மளிகை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால், ஓட்டல்கள், பேக்கரிகளில் உணவு வகைகள் மற்றும் இனிப்பு, காரம் வகைகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மேற்கொண்டுள்ள இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக லாரி உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களின் வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதனால், உணவு தானியங்கள் உள்ளிட்ட அனைத்து வித சரக்குகளை இடமாற்றுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவு அதிகரித்து, அது பொருட்களின் மீதான விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எப்படியும் கடைசியில் மக்கள் தலையில் தான், அதன் விலையேற்றம் வந்து விடிகிறது. இந்தியாவிற்கு சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கு மேல் சென்றுவிட்டதால் 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இனி நஷ்டத்தை ஈடுசெய்ய இயலாது என கைவிரித்துள்ளன.
இதனால், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பின்பற்றியது போல் மீண்டும் தினசரி மாற்றிமைக்கும் முறைக்கு மாறிக்கொள்ள அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், வரும் நாட்களில் தினமும் 5 முதல் 20 காசுகள் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதில், தற்போது மேற்கொள்ளப்படும் மாற்றம் என்பது விலை உயர்வை தான் கொடுக்கும். அதனால், வாகன ஓட்டிகள் இனி எரிபொருளுக்கான செலவினத்தை அதிகளவு மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
