ஆறுமுகநேரி, மே 19: காயல்பட்டினத்தில் 5 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிவதற்காக அகற்றப்பட்ட கால்வாய் மூடிகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். காயல்பட்டினம் நகராட்சி ரத்னாபுரியில் இருந்து அமைக்கப்பட்ட புதிய கழிவுநீர் கால்வாய் மூலம் காயல்பட்டினம் – திருச்செந்தூர் சாலை ஓடக்கரையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இணைக்கப்பட்டு அதன் வழியாக கழிவுநீர் மற்றும் மழைநீர் கடலுக்கு செல்கிறது. இந்நிலையில் கடந்த 2025 நவம்பர் மாதம் பெய்த மழையில் காயல்பட்டினம் பகுதிகளில் உள்ள ரத்னாபுரி, சீதக்காதி தெரு, டிரைவர் காலனி, உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெரு, காட்டு தைக்கா தெரு, மாட்டுக்குளம், காட்டு மொஹதூம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. அப்போது இப்பகுதிகளில் நீர்மட்டம் தரை மட்டத்திற்கு மேல் இருந்ததால் மழைநீர் வடியவில்லை.
மேலும் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் மற்றும் பழைய கால்வாய்களிலும் அடைப்புகள் ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேலாக குடியிருப்பு, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியிருந்தது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் மூலம் மின் மோட்டார்கள் மற்றும் தண்ணீர் டேங்கர் வாகனம் மூலம் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்வாய் மூலம் மழைநீர் வடியாததால் ரத்னாபுரி முதல் ஓடக்கரை வரையுள்ள கால்வாய்களின் மேல் மூடிகளை அகற்றி ஓடைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மழைநீர் ஓரிரு நாட்களில் மிதமான வேகத்தில் வடிந்தது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை காலங்களிலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே காயல்பட்டினம் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாருவதற்காக எடுக்கப்பட்ட மூடிகள், மீண்டும் போடப்படாமல் உள்ளது. தற்போது வரை கால்வாய்கள் மூடப்படாத நிலையில் அருகில் பள்ளி, குடியிருப்புகள் உள்ளதால் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் நிலை காணப்படுகிறது. இந்த கால்வாய் ஓடைகள் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் முன் இருப்பதால் ஓடைகள் மேல் தற்காலிக நடைபாதை அமைத்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் அவ்வப்போது ஓடைகளில் தவறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். பேருந்து நிலையம் அருகில் பூந்தோட்டம் திரும்பும் சாலையில் கால்வாய் தூர்வார தோண்டப்பட்ட சாலை மற்றும் கால்வாய் தற்போது வரை மூடாமல் முறையான பாதுகாப்பற்ற தடுப்புகள் கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இப்பகுதியை கடந்து செல்ல சிரமத்துக்குள்ளாகி தவிக்கின்றனர்.
இதுபோன்று முக்கிய கடைவீதிகள், மார்க்கெட் பகுதி, பள்ளி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் அனைத்து தரப்பினரும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிவதற்காக 5 மாதங்களுக்கு முன்பு உடைக்கப்பட்ட கால்வாய் ஓடைகளை முறையாக சீரமைத்து பாதுகாப்பற்று திறந்து கிடக்கும் கால்வாய் ஓடைகளுக்கு மூடி போடுவதற்கு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
