×

கோவில்பட்டியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

 

கோவில்பட்டி, மே 19: கோவில்பட்டியில் இரவு, பகல் என எந்நேரமும் சாலையை முற்றுகையிட்டு நடமாடும் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். கோவில்பட்டி பஜார், மெயின் ரோடு, தெருக்கள், எட்டயபுரம் சாலை, மந்திதோப்பு சாலை, பசுவந்தனை சாலை, கடலையூர் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் இரவு, பகல் என எந்நேரமும் மாடுகள் முற்றுகையிட்டு கும்பலாக நடமாடி வருகின்றன. இதனால் அனைத்து சாலைகளிலும் மாடுகளால் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலைகளில் நடந்து செல்வோர், சைக்கிளில் செல்வோரை மாடுகள் துரத்திச் சென்று முட்டி காயப்படுத்தி வரும் சம்பவங்களும் நடக்கின்றன.

சில நேரங்களில் மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி சண்டையிட்டுக் கொண்டு, சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் மாடுகள் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றன. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தாலும் மாடுகள் விலகி செல்வதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் பஜார் வீதிகளுக்கு வரும் மாடுகள் காய்கறி கடை, பலசரக்கு கடைகளுக்கு வெளியே வைத்திருக்கும் பொருட்களை தின்றும், தூக்கி வீசியும் சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்களும், வியாபாரிகளும் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் நகராட்சி அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறையும், அச்சுறுத்தலையும், விபத்துகளையும் ஏற்படுத்தும் வகையில் மாடுகள் நடமாடுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : KOVILPATI ,Kovilpatty ,Kovilpatty Bazaar ,Main Road ,Streets ,Etayapuram Road ,Manthoppu Road ,Vasuandana ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்