சென்னை: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.20 வசூலிப்பதாக குடிமகன்கள் சரமாரி புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு அடுத்த சித்தோடு ஆவின் நிறுவனத்தின் எதிரே அரசு டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு மதுப்பிரியர்கள் ஊழியர்களிடம் வரிசையில் நின்று மது வாங்கினர். அப்போது மதுபாட்டிலுக்கு கூடுதலாக ஜிபே மூலம் ரூ.20 வசூலித்துள்ளனர்.
மதுவாங்கியவர்கள், எதற்கு ரூ.20 கூடுதலாக வசூலிக்கிறீங்க என கேட்டதற்கு பணியாளர்கள் முறையாக பதிலளிக்காததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சித்தோடு போலீசார் வந்து மதுபிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசம் அடையாத அவர்கள், ஈரோடு மேற்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஆனந்த் மோகனிடம் புகார் அளித்தனர். உடனே அங்கு வந்த எம்எல்ஏ ஆனந்த் மோகன், பிரச்னை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கடைக்குள் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர், மதுபாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என எச்சரித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
தஞ்சையில் 3 பேர் சஸ்பெண்ட்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே எஸ்.புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்: 8152ல், மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.20 கூடுதலாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தமிழ்மணி விசாரணை நடத்தியதில் 20 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து கடை மேற்பார்வையாளர்கள் மனோகரன், ஆறுமுகம் மற்றும் விற்பனையாளர் சேகர் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து அவர் நேற்று உத்தரவிட்டார்.
வாலிபரை தாக்க முயற்சி, வீடியோ வைரல்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மது வாங்கச் சென்றார். அங்கிருந்த ஊழியர்கள் ரூ.10 கூடுதலாக வாங்கியதாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட இளைஞரை ஊழியர்கள் கம்பால் தாக்க முயன்றுமிரட்டியுள்ளனர். .
இதேபோல மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக 10ரூபாய் வசூலிப்பதை கண்டித்த வாலிபரன் செயினை ஊழியர் அறுத்தார். இதனால் தகராறு முற்றவே கடை மூடப்பட்டது. மற்ற மதுபிரியர்களும் கடையை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடை திறக்கப்பட்டது.
இதே போல் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு ராஜவீதியில் உள்ள கடை, வேலூர் மாவட்டம் காட்பாடி , திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி பகுதியில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதை கண்டித்து வாக்குவாதம் எழுந்தது.
* மது விற்றதை போலீசுக்கு தெரிவித்தது யார்? தாய், மகள், ஊராட்சி உறுப்பினர் மீது தாக்குதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கணேஷ் நகரில் டாஸ்மாக் கடை அருகே குமரேசன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்துள்ளார். இதுபற்றி 3 நாட்களுக்கு முன்பு பொன்னை தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்பகுதியை சேர்ந்த தொழிலாளியின் மனைவி சின்ன பொண்ணு தான் புகார் கொடுத்துள்ளார் என தெரிந்து குமரேசன் தம்பி சுதாகர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் புகுந்து சின்னப்பொண்ணுவையும் அவரது மகள் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சுரேஷ் ஆகியோரை சரமாரி தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த சுரேஷ் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாநனது. இதுகுறித்து பொன்னை போலீசார் சுதாகர் மீது 2 வழக்குகள் பதிந்து கைது செய்தனர். குமரேசனை தேடி வருகின்றனர்.
* மதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு கடை ஊழியர் காயம்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் தனியார் மதுபான கடை உள்ளது. இங்கு நேற்று காலை போதையில் வந்த மர்மநபர்கள், திடீரென கடையின் வெளிச்சுவர் மற்றும் உள் சுவற்றில் 3 நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கடையில் வேலை பார்க்கும் மாயன்(34) காயமடைந்தார். கூமாபட்டி போலீசார் வந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தது மர்ப நபர்களை தேடி வருகின்றனர்.
