×

வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை: தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

 

சென்னை: பக்ரீத் பண்டிகை வருகிற 28ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதம் 10ம் நாள் இந்த கடமை நிறைவேறுகிறது.

அதே நாளில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஹஜ் கடமை நிறைவேறுவதால் இது ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என்றும், இறைவனின் கட்டளைக்கு ஏற்ப தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்துப் பலியிட முயன்ற நபி இப்ராகீமின் (அலை) தியாகத்தை நினைவுகூரும் வகையில் ‘தியாகத் திருநாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லாஹ் செவ்வாய்க்கிழமை (இன்று) துல்ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய (ஷரீஅத்) முறைப்படி அறிவிக்கப்படுகிறது. ஈதுல் அழ்ஹா (பக்ரீத்) பெருநாள் வரும் 28ம் தேதி (வியாழக்கிழமை கொண்டாடப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழகத்தில் பிறை எங்கும் தென்படவில்லை. எனவே இன்று (நேற்று) மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது. வரும் 27ம் தேதி (புதன்கிழமை) அரபா நோன்பு என்பதையும் 28ம் தேதி (வியாழக்கிழமை) ஹஜ் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bakrid festival ,Tamil Nadu ,Chief Qazi ,Chennai ,Tamil Nadu government ,Islam ,Hajj ,Mecca ,
× RELATED காதலன் மிரட்டியதால் பிளஸ் 1 மாணவி...