×

தொழில்துறை கூட்டமைப்பு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு: வளர்ச்சி, முதலீடு குறித்து ஆலோசனை

 

சென்னை: முதல்வர் விஜய்யுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பினர் சந்தித்தனர். அப்போது, மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி, முதலீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) பிரதிநிதிகள் குழுவினர் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. முதல்வர், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் எப்ஐசிசிஐ வழங்கி வரும் முக்கிய பங்களிப்பை பாராட்டினார்.

மேலும், எப்ஐசிசிஐ கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கவனமாக கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் இந்த பயணத்தில், பிரதிநிதிகள் குழுவின் வழிகாட்டுதலும், பரிந்துரைகளும் தொடர்ந்திட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டார்.

இந்த சந்திப்பில், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே.வேலு, இணை தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் சுதர்சன், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* வணிக செயல்முறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை

முதல்வர் விஜய்யை நேற்று தலைமைச் செயலகத்தில், சென்னை தொழில் வர்த்தக கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் வணிக செயல்முறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, அதன்மூலம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அரசு மற்றும் தொழிலகங்கள் இடையே, பயனுள்ள இணைப்பு பாலமாக செயல்பட்டு வரும் எம்சிசிஐ அமைப்பின் முக்கிய பங்கினை முதல்வர் பாராட்டினார்.

மேலும், எம்சிசிஐ கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கவனமாக கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க, எம்சிசிஐ தொடர்ந்து தனது ஒத்துழைப்பையும், வழிகாட்டுதலையும் வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது, எம்சிசிஐ தலைவர் மற்றும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் ஆலோசகர் ராம்குமார் சங்கர், துணைத்தலைவர் மற்றும் டெல்பி டிவிஎஸ் தலைவர் ஏ.விஸ்வநாதன் மற்றும் பொதுச்செயலாளர் கே.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Industry Federation ,Chief Minister ,Vijay ,Chennai ,Federation of Indian Chambers of Commerce and Industry ,Chennai Secretariat ,Federation of Indian Chambers of Commerce and Industry… ,
× RELATED காதலன் மிரட்டியதால் பிளஸ் 1 மாணவி...