மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.20 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வரலாறு காணாத அளவிற்கு புதிய சரிவை சந்தித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை (ஒரு பீப்பாய் சுமார் $106 என்ற அளவில்) கடுமையாக உயர்ந்துள்ளது. அதே நேரம் உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார கொள்கை முடிவுகளால் டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவாக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எரிசக்தி செலவுகள் கடுமையாக உயர்ந்து வருவதால் இந்தியா செய்யும் இறக்குமதி செலவினங்கள் அதிகரித்து வருகின்றன; இதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக ஆசியாவிலேயே மிக மோசமான செயல்பாட்டைக் கொண்ட நாணயமாக இந்திய ரூபாய் உருவெடுத்துள்ளது. அதே நேரம் பல சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.
இதனிடையே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் கடுமையான சரிவு இந்திய சந்தைகளையும் நிலைகுலையச் செய்துள்ளது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது, மேலும்;நிஃப்டி 23,400-க்கும் கீழே இறங்கியது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ரூபாயின் மதிப்பு 5.5% சரிந்துள்ளது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டில் இதுவரை ஆசியாவிலேயே மிக மோசமான செயல்பாட்டைக் கொண்ட நாணயமாக நம் இந்திய ரூபாய் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
