திருவள்ளூர்: காக்களூர் ஏரியின் முகப்பு பகுதியில் இரவு நேரங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அணைக்கபடுவதால் பொதுமக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. 194 ஏக்கர் பரப்பளவில் 2682 மீட்டர் நீளம் வரையிலான நான்கு மதகுகள், இரண்டு கலங்கல்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியில் 15 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது. இதனால் அதிகளவில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் உருவானது. மேலும், திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் அனுப்ப வேண்டிய நிலை இல்லாமல் போனது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது வீடுகள் அதிகளவில் உருவானதால் 100 அடியாக குறைந்துள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சுற்றுலா என்றால் சென்னை மெரினா கடற்கரைக்கும், படகு சவாரி என்றால் சென்னை முட்டுக்காடு பகுதிக்கும் செல்லவேண்டியிருக்கிறது. எனவே காக்களூர் ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காக்களூர் ஏரியை மேம்படுத்தும் பணி ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி, பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி, ஊராட்சி ஒன்றிய பொது நிதிகளின் ஒருங்கிணைப்பு நிதி ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.3.52 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மார்ச் 14ம் தேதி அப்போதைய அமைச்சர் சா.மு.நாசர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அந்த காக்களூர் ஏரியில் திருவள்ளூர் நகரத்தின் நுழைவு வாயிலில் அழகு உணர்ச்சியுடன் கூடிய வளைவு, பொதுமக்கள் நடைபாதையும், அந்த நடைபாதையின் இருபுறமும் விளக்குகள் மற்றும் பசுமையினை உறுதி செய்யும் வண்ணமலர் பூக்கும் மரக்கன்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதி உள்ள பூங்கா, வெளிப்புற உடற்பயிற்சி சாதனங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக பொதுமக்கள் குழந்தைகள் பெரிதும் விரும்பும்”ஐ லவ் திருவள்ளூர்” எனும் செல்பி பாயிண்ட் ஒளிரும் வண்ண விளக்குகளுடன் பொருத்தப்பட்டு காக்களூர் ஏரி மெருகேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் நகர மற்றும் காக்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இதனை கண்டு களித்து வந்தனர்.
இந்நிலையில் ஏரிக்கரையின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட வளைவில் ஒளிரும் மின் விளக்குகள் தற்போது அணைக்கப்பட்டு, இரவு நேரங்களில் யாரும் அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் பலகை இருப்பதால் அது தெரியக் கூடாது என்பதற்காக இரவு நேரங்களில் மின்விளக்கு அணைக்கப்படுகிறதா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
