×

திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் வீதிகளின் பெயர்கள் ஆன்மீக ரீதியாக மாற்றம்

 

திருமலை: ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் தெருக்களின் பெயர்கள் ஆன்மீக ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையில் உள்ள வீதிகளுக்கு வேதங்கள், முற்கால மகான்கள் மற்றும் ஆழ்வார்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் கிழக்கு மாடவீதி ரிக்வேத பாதை, தெற்கு- யஜுர்வேத பாதை, மேற்கு- சாமவேத பாதை, வடக்கு- அதர்வணவேத பாதை என மாற்றப்படுகிறது.

அதேபோல் பேடி ஆஞ்சநேயசுவாமி கோயில் பகுதி சாளுவ நரசிம்ம ராயர் கோயிலுக்கு எதிரே உள்ள காலி இடம் ராமானுஜர் பகுதி, நகரும் பாலத்தில் இருந்து சஹஸ்ர தீப அலங்கார சேவை வரை திருமலை நம்பி சந்திப்பு, கோயிலின் பின்புறம் அனந்தாழ்வார் பெயர் வைக்கப்பட்டுள்ளது. லேபாக்சி சர்க்கிளுக்கு அன்னமய்யா, எஸ்எம்சி சர்க்கிளுக்கு புரந்தரதாசு, ராம்பகீஜா சந்திப்புக்கு தொண்டமான் சக்கரவர்த்தி, நந்தகம் ஓய்வறை சந்திப்புக்கு வகுலமாதா, ஜிஎன்சி சந்திப்பு கருடாத்ரி, வைகுண்டம் 2 சந்திப்புக்கு திருமலை ராயர், வெளிவட்ட சாலைக்கு திருவேங்கடபதம், உள்வட்ட சாலைக்கு அன்னமாச்சார்யா மார்க்கம் என பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் திருமலையில் முக்கியமான வழித்தடங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎன்சி முதல் லேபாக்சி சந்திப்பு வரை உள்ள பாதை கருடாத்ரி மார்க்கம், பத்மாவதி விசாரணை அலுவலகம் முதல் விருந்தினர் மாளிகை வரை பத்மாவதி மார்க்கம், பஸ் நிலையம் முதல் பணியாளர்கள் கேண்டீன் வரை குலசேகராழ்வார் மார்க்கம், நந்தகம் சந்திப்பு முதல் கோகர்பம் அணை வரை நித்யகல்யாண மார்க்கம், பிளோர் மில் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை ஆகாச கங்கா மார்க்கம், ராம்பகீஜா முதல் தெப்பக்குளம் வரை ஸ்ரீகிருஷ்ணதேவராய மார்க்கம், ஜி.என்.சி. லேபாக்சி நடைபாதை நம்மாழ்வார் மார்க்கம், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை ஸ்ரீவாரி மார்க்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெயர் பலகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பெயர் பலகைகள் உரிய இடங்களில் அமைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Tirumala ,Tirupati Ezhumalaiyan ,Temple ,Ezhumalaiyan Temple ,Tirupati ,Ezhumalaiyan ,Vedas ,Azhwars ,
× RELATED நிலைக் குழு கூட்டங்களில் 53% எம்பிக்கள்...