லக்னோ: உத்தரப் பிரதேச மாநில எம்எல்ஏக்கள் (உறுப்பினர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம்) சட்டம், 1980-இன் பல்வேறு பிரிவுகளை அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி லோக் பிரஹாரி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் எஸ்.என்.சுக்லா அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் ராய்,ஏ.கே.சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் என்பது தர்மமோ அல்லது கருணைப் பலனோ அல்ல, மாறாக அவர்களின் சட்டமன்றப் பதவிக் காலத்தில் ஆற்றிய பொதுச் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வமான வசதி என்று மாநில அரசு சமர்ப்பித்தது. மேலும், இந்த விதிகள் மாநில சட்டமன்றத்தால் சட்டத்தின் மூலம் இயற்றப்பட்டவை என்றும், அவற்றை தன்னிச்சையானவை எனக் கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.
தனது தீர்ப்பில், நீதிபதி அமர்வு பின்வருமாறு குறிப்பிட்டது: மாநில சட்டமன்றம் அதன் ‘உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்காக’ சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை இயற்றுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எந்த தடையும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்கான சலுகைகளை அளிப்பதை எதிர்த்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
