- அமித் ஷா
- திரிணமுல்
- அபிஷேக்
- கொல்கத்தா
- திரிணாமூல் காங்கிரஸ்
- அபிஷேக் பானர்ஜி
- மத்திய அமைச்சர்
- கொல்கத்தா, மேற்கு வங்காளம்
- திருமூலை காங்கிரஸ்...
கொல்கத்தா: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடந்த பிரசார கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி பேசும்போது, ‘மே 4ம் தேதி (வாக்கு எண்ணிக்கை நாள்) அவர்களை காப்பாற்ற யார் வருகிறார்கள் என்று பார்க்கிறேன்; டெல்லியில் இருந்து எந்த ‘காட்பாதர்’ வந்து அவர்களை காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன்’ என வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சமூக ஆர்வலர் ராஜீவ் சர்க்கார் என்பவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் கடந்த 3ம் தேதி வரை பல்வேறு இடங்களில் அபிஷேக் பானர்ஜி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், கலவரத்தை தூண்டுதல், அமைதியை சீர்குலைத்து வெறுப்பை பரப்புதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குப்பதிவுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திரா பட்டாச்சார்யா, கல்யாண் பானர்ஜி ஆகியோருடன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் தங்கள் கட்சி அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வாதாடினார்.
அப்போது, ‘தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநிலத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 150 முதல் 160 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன; 2,000 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன’ என்று மம்தா பானர்ஜி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தில் புகைப்படங்களை சமர்ப்பித்த அவர், ‘போலீசார் முன்னிலையிலேயே கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்; இவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்’ என்று கோரினார்.
வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை போலீசார் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். வன்முறைக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது. மேலும், இந்த மனு குறித்து மூன்று வாரங்களுக்குள் மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
