கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து வங்கதேச எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த ஊடுருவல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அவர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக, எல்லையில் உள்ள இடைவெளிகளை அடைக்க 45 ஏக்கர் நிலத்தை அடுத்த 45 நாட்களுக்குள் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நதி நீர் பங்கீடு விவகாரங்களில் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. தற்போது மாநிலத்திலும் ஒன்றியத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதால், ‘டபுள் இன்ஜின்’ அரசுகளின் மூலம் எல்லை பாதுகாப்பு வியூகம் வேகம் எடுத்துள்ளது. இதனிடையே, இந்தியப் படைகளின் இந்த அதிரடி நடவடிக்கைகள் குறித்து வங்கதேச வெளிவிவகார ஆலோசகர் ஹுமாயூன் கபீர் கூறுகையில், ‘எல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது, இதற்கு வங்கதேசம் ஒருபோதும் அஞ்சாது’ என்று தெரிவித்துள்ளார்.
உலகிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட எல்லைகளில் ஒன்றாக இந்திய-வங்கதேச எல்லை கருதப்படுகிறது. இங்கு சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க முள்வேலிகள் அமைக்கப்படுவதோடு, நவீன தொழில்நுட்பங்களான வெப்ப உணரிகள் மற்றும் மின்விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, கடினமான நிலப்பரப்புகளில் முதலைகள் மற்றும் பாம்புகள் நிறைந்த சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை தடைகளை பயன்படுத்தவும் பாதுகாப்பு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. சமீபத்தில் பிராமன்பாரியா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வங்கதேச நாட்டினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு வங்கதேசத்தில் உள்ள தேசிய குடிமக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்தாலும், எல்லையில் நிலவும் இந்த கருத்தியல் மோதல் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டீஸ்டா நதி நீர் பங்கீடு போன்ற ஒப்பந்தங்களை எட்ட முடியாமல் இரு நாடுகளும் தவித்து வருகின்றன. இந்நிலையில், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரும் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
