திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் பொன்னூர் அருகே உள்ள நிடுப்ரோலு ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதைப்பார்த்த மர்ம நபர்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் உள்ள ரயில்வே சிக்னல்களை சேதப்படுத்தி அவ்வழியாக செல்லும் ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் உள்ள மர்ம நபர்கள் ஏதாவது தடயங்கள் விட்டுச்சென்றார்களா? என்று ஆய்வு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க, ரயில்வே மற்றும் உள்ளுர் போலீசாரும் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
