×

கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்தது: எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்ததாகவும் அதுதொடர்பாக தவறு செய்தவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 9 ஆண்டுகளில் நீட் வினாத்தாள் 4 முறை கசிந்துள்ளது. ஆனால் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

வினாத்தாள் கசிவு என்பது தானாகவே நிகழ்ந்த ஒன்றல்ல. இதில் உயர் மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை அரசு பந்தாடுகிறது. மாணவர்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் என்பதை சொல்ல விரும்புகிறேன். இந்த அரசாங்கத்திற்கு வெகுஜனப் போராட்டத்தின் மொழி மட்டுமே புரிகிறது’’ என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஸ்; தனது எக்ஸ் பதிவில், ‘‘இரட்டை என்ஜின் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை குழப்பத்திலும் பதட்டத்திலும் தள்ளப்பட்டுள்ளது. திறமையற்ற, பயனற்ற மோடி ஆட்சியில் ஆளுகையும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை. தினசரி நிர்வாகம் செய்ய திறனற்ற அரசு இது’’ என்றார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா எக்ஸ் பதிவில், ‘‘எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் முதலில் தேசிய தேர்வு முகமையை கலைத்து விடுங்கள். நீட் தேர்வை நிறுத்துங்கள். நீட்டால் சாதாரண பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் மீதான தாக்கத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சிபிஐ விசாரணை வெறும் கண் துடைப்பு. மோடி அரசு மிகவும் உணர்வற்றது. ஜனநாயகம் என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டுமல்ல. மக்கள் மீது நீங்கள் எவ்வளவு உணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதை பற்றியது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ‘‘நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது, பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மற்றுமொரு பேரிடி. தேசிய தேர்வுகளில் தொடர்ச்சியான தோல்விகள் அமைப்பின் மீதான நம்பிக்கையை அழித்து வருகின்றன. நமது இளைஞர்கள் இதைவிட சிறந்ததற்கு தகுதியானவர்கள் என்பதால், அரசாங்கம் இந்த சீர்கெட்ட செயல்முறையை சரிசெய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘‘நீட் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதால் அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களாகவே மாநிலத்தில் இந்த விவகாரத்தை பாஜ அரசு மூடி மறைக்க முயற்சி செய்தது. தற்போது உண்மை வெளிவந்து விட்டது. பாஜ அரசின் உண்மையான முகம் அம்பலமாகி விட்டது’’ என்றார்.

இந்த சம்பவத்தில் உடனடியான, பாரபட்சமற்ற, காலவரைக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ள அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு, முறைகேட்டில் தொடர்புடைய அனைவருக்கும் முன்மாதிரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags : NEET ,New Delhi ,Kejriwal ,
× RELATED சிறுத்தை தாக்கி யானை பலி