வினாத்தாள் கசிவு; நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து: சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு

* 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டால், கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ரத்து செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை கூறி உள்ளதால், 22.79 லட்சம் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மருத்துவ இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, மருத்துவராகும் கனவுகளுடன் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், வினாத்தாள் கசிந்தாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை நேற்று அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

இது குறித்து தேசிய தேர்வு முகமையின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய முகமைகளின் தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் பகிர்ந்து கொண்ட விசாரணை முடிவுகளை ஒருங்கிணைத்து ஆராய்ந்த போது, தற்போதைய தேர்வு நடைமுறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல அனுமதிக்க இயலாது என்பது உறுதியானது. இதனால் ஒன்றிய அரசின் ஒப்புதலுடன் மே 3ம் தேதி நடத்தப்பட்ட நீட்-யுஜி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

இதற்கான மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு என்டிஏ முழு ஒத்துழைப்பை வழங்கும். விசாரணைக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்கள், பதிவுகள், உதவிகளை அளிக்கும். மாணவர்களின் நலன் கருதியும், தேசிய தேர்வு அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மதிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மறுதேர்வு நடத்துவது மாணவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும், தேர்வு முறை மீதான நம்பிக்கைக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய மற்றும் நீண்டகால பாதிப்பை தடுப்பதற்கு இந்த முடிவு அவசியம். மறுதேர்வுக்காக மாணவர்கள் புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே உள்ள பதிவு விவரங்கள், விண்ணப்பதாரர் நிலை மற்றும் தேர்வு மைய தேர்வுகள் ஆகியவை மறுதேர்வுக்கு அப்படியே பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கூடுதல் தேர்வு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கனவே செலுத்திய கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும். மறுதேர்வு தேதி மற்றும் திருத்தப்பட்ட நுழைவுச்சீட்டு, தேர்வு அட்டவணை ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் அறிவிக்கப்படும். மாணவர்களும், பெற்றோரும் தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நுழைவுத்தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படுகிறது. இதில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்திலும் கடந்த சில ஆண்டுகளாக பல குளறுபடிகள் நடந்தாலும், வினாத்தாள் கசிவு காரணமாக இந்த ஆண்டுதான் முதல் முறையாக நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இத்தேர்வை எழுதிய 22.79 லட்சம் மாணவ, மாணவிகளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

பல மாதங்களாக பயிற்சி மையங்களில் இரவு பகலாக படித்த அவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டுமென்பது மனதளவில் அவர்களை பலவீனப்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே நீட் நுழைவுத்தேர்வே கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலை கிளப்பி உள்ளது. நாடு முழுவதும் ஏபிவிபி, தேசிய மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.

தேசிய தேர்வு முகமையின் முடிவை எதிர்த்து பல தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சிபிஐ தனது விசாரணையை தொடங்கியிருக்கிறது. தேசிய தேர்வு முகமையும் அடுத்த ஓரிரு நாளில் மறுதேர்வை நடத்த முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

* கேரளாவில் இருந்து எம்பிபிஎஸ் மாணவர் அனுப்பினாரா?
வினாத்தாள் கசிவு முறைகேட்டின் பின்னணியில் கேரளாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பயிலும், ராஜஸ்தான் மாநிலம் சூருவைச் சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகப் போலீசார் சந்தேகித்துள்ளனர். அவர் தான் மே 1ம் தேதியன்று சிகாரில் உள்ள தனது நண்பருக்கு வினாத்தாளை பகிர்ந்துள்ளார். அங்கிருந்து விடுதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் வழியாக இது மற்றவர்களுக்கும் பரவியுள்ளது.

மேலும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் இந்த வினாத்தாள் பலமுறை பகிரப்பட்டுள்ளது. இது மிக அதிக அளவிலான மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே சென்றடைந்திருக்கலாம். இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, ‘‘தேர்வு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு தான் முறைகேடு குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. விசாரணை அமைப்புகளின் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

* 22 லட்சம் மாணவர்களின் கடின உழைப்பு நசுக்கப்பட்டது
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள் மற்றும் கனவுகள் ஆகியவை ஊழல் நிறைந்த பாஜ ஆட்சியால் நசுக்கப்பட்டுவிட்டன. மாணவர்கள் இந்த தேர்வை எழுத, அதற்கு தயாராக சில தந்தைகள் கடன் வாங்கினர். சில தாய்மார்கள் தங்கள் நகைகளை விற்றனர்.

லட்சக்கணக்கான குழந்தைகள் இரவு முழுவதும் கண்விழித்துப் படித்தனர். ஆனால், அதற்குப் பரிசாக அவர்களுக்குக் கிடைத்தது என்னவோ வினாத்தாள் கசிவு, அரசின் அலட்சியம் மற்றும் கல்வித்துறையில் நடைபெறும் திட்டமிட்ட ஊழல் மட்டுமே. இது வெறும் தோல்வி மட்டுமல்ல. இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றமும் கூட. பிரதமரின் அமிர்த காலம் என கூறப்படும் இந்த ஆட்சி, நச்சு நிறைந்த விஷக்காலமாக மாறி விட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* மாதிரி வினாத்தாளில் இருந்த 135 கேள்வி அப்படியே வந்தது
ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டு குழுவின் கூடுதல் தலைமை இயக்குநர் விஷால் பன்சால் அளித்த பேட்டியில், ‘‘தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களிடையே பரப்பப்பட்டதாக கூறப்படும் மாதிரி வினாத்தாள் மீதே தற்போதைய விசாரணை முழுமையாகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மாதிரி வினாத்தாளில் 410 கேள்விகள் இருந்துள்ளன. அதில், சுமார் 120 கேள்விகள் வேதியியல் பாடத்தில் இருந்து நீட் தேர்வில் அப்படியே இடம் பெற்றிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வேதியியல் பாடப் பிரிவில் மொத்தம் 45 கேள்விகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இதில் மொத்தம் 4 வெவ்வேறு கேள்வித்தாள் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதே போல உயிரியல் பாடப்பிரிவில் சுமார் 90 கேள்விகள் மாதிரி வினாத்தாளில் அப்படியே இடம் பெற்றிருந்தன. இந்த மாதிரி வினாத்தாள் மாணவர்களிடையே தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு முன்பாகவே சென்றடையத் தொடங்கிவிட்டது. இந்த மாதிரி வினாத்தாளை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அது பொதுவெளியிலும் தாராளமாகக் கிடைக்கிறது’’ என்றார். சமூக ஊடக தளத்தில் கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாள் மாணவர்கள் இடையே அதிகளவில் பரவியிருக்கிறது. அதில், 281 கேள்விகளில் 135 கேள்விகள் நீட் தேர்வில் அப்படியே கேட்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். தலா ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண். மொத்தம் 720 மதிப்பெண்கள். இதில் சுமார் 600 மதிப்பெண் பெறக்கூடிய அளவுக்கு மாதிரி வினாத்தாளில் இருந்த கேள்விகள் அப்படியே கேட்கப்பட்டுள்ளன.

* 42 மணி நேரத்திற்கு முன் வினாத்தாள் கசிந்தது
கடந்த 3ம் தேதி நீட்தேர்வு நடந்த நிலையில், அதற்கு 42 மணி நேரத்திற்கு முன்பாக மே 1ம் தேதி வினாத்தாள் கசிந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் சிறப்பு செயல்பாட்டு குழு போலீசார் நடத்திய விசாரணையில் சிகார் பகுதியில் நீட் வினாத்தாள் முதல் முறையாக கசிந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் போலீசார் அளித்த தகவலின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பல மாநிலங்களில் உள்ள மோசடி நெட்வொர்க் சம்மந்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சிலர் ஒன்று கூடி அங்கிருந்து வினாத்தாளை நகல் எடுத்து அரியானா, ஆந்திரா, காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பரப்பியதாக கூறப்படுகிறது.

* ரூ.5 லட்சம் வரை விற்பனை
நீட் வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களிடம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறி உள்ளனர். டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர், செல்போன் மூலம் தனக்கு தகவல் கிடைத்ததும் ராஜஸ்தானின் சிகாருக்கு நேரில் வந்து வினாத்தாளை பணம் கொடுத்து வாங்கியதாக கூறி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற போட்டித் தேர்வு வினாத்தாள்களை தேர்வுக்கு முன்பாக கசியவிட்டு பணம் சம்பாதிப்பதை பல கும்பல்கள் தொழிலாக செய்து வருவதாக கூறப்படுகிறது.

* சிபிஐ வழக்கு பதிவு நாசிக் நபரிடம் விசாரணை
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிபிஐ தரப்பில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் போலீசார் அளித்த தகவலின் பேரில் மகாராஷ்டிரா போலீசார் நாசிக்கில் 30 வயது நபர் ஒருவரை நேற்று பிடித்தனர். அவரை சிபிஐ கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர். முன்னதாக, ராஜஸ்தான் போலீசார் அறிவுறுத்தலின் பேரில் 5 மாநிலங்களில் 9 சந்தேக நபர்கள் பிடித்து விசாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மணிஷ் யாதவ் என்பவரையும், வினாத்தாளை பரப்பிய ராகேஷ் மண்டாவாரியா என்பவரையும் ராஜஸ்தான் போலீசார் கஸ்டடியில் எடுத்து தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த விசாரணையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: