மாதவிடாய் ஒரு விலக்கப்பட்ட விஷயமா, இல்லையா? அவரவர் மனசாட்சியை பொருத்தது: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கு, 14வது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பெண் ஆதரவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷாதன் பராசத், ‘‘50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கலப்பு திருமணங்களுக்கும், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கலப்பு மதத் திருமணங்களுக்கும் எதிராக உள்ளனர் என்று கூறும் 2025ம் ஆண்டு கணக்கெடுப்பை இந்த வழக்கின் வாதங்களின் போது குறிப்பிட்டு தெரிவித்துள்ளேன். 2025ம் ஆண்டில் இதுவே பொது ஒழுக்கத்தின் பிரதிபலிப்பாக கொள்ளப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் இதனை அமல்படுத்த மாட்டீர்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘இதுபோன்ற கணக்கெடுப்புகளே சிக்கலானவை. இவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இதுபோன்ற ஆதாரங்களை நம்புவதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் கல்விசார் பணிகள் என்ற போர்வையில், ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுகின்றன.

அவற்றை அளவுக்கு அதிகமாக நம்பிவிடக் கூடாது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி நாகரத்னா, ‘‘ஒவ்வொரு தனிநபருக்கும் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு. அதில் பாரபட்சம் எதற்கு என்று கேட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஷாதன் பராசத், ‘‘இரண்டு நாட்களுக்கு முந்தைய விசாரணையின் போது நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். அதாவது அடிப்படை கடமைகள் பற்றிய அத்தியாயமான சரத்து 51ஏ என்பதை தெரிவித்திருந்தார்.

இதில் பிரிவு 51ஏவிற்குள், பெண்களின் கண்ணியத்திற்குக் குந்தகத்தை விளைவிக்கும் நடைமுறைகளைக் குடிமக்கள் கைவிட வேண்டும் என்ற ஒரு அரசியலமைப்பு கடமையை நீதிபதிகளாகிய நீங்களே காண்பீர்கள். நாகரிகத்தை சீர்குலைக்கும் செயலாகும். எனவே அது மற்றொரு அரசியலமைப்பு அடையாளமாக அமைகிறது. அரசும் சமூகமும் இந்த விழுமியங்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற ஒரு அரசியலமைப்பு எதிர்பார்ப்பை அது பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, ‘‘தனிநபர் உரிமைகளுக்கும், குழு உரிமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கும், போட்டியிடும் நலன்களை நிர்வகிப்பதற்கும் விகிதாசாரச் சோதனை பயன்படுத்தப்பட வேண்டும். . முதலில், ஒரு உரிமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையானது முறையான நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த்,\\” மக்கள் தங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் கூட்டாக சமூக சீர்திருத்தத்தை நாடினால், நீதிமன்றங்கள் ஒரு சீர்திருத்த நடவடிக்கையை ஏற்கலாம். ஆனால், ஒரு விஷயம் மக்கள் மீது ‘திணிக்கப்பட்டாலோ’ அல்லது அவர்களை ‘வாயடைக்கும்’ ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டாலோ நீதித்துறைத் தலையீடு ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா,‘‘அரசு ஒரு சமூக நல சட்டத்தை இயற்றினால், அது மத நடைமுறைகளில் தலையிடுகிறது என்ற அடிப்படையில் ரத்து செய்யப்படாமல், நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி பி.வி.நாகரத்னா கூறிய கருத்தில்,‘‘மாதவிடாய் ஒரு விலக்கப்பட்ட விஷயமா இல்லையா என்பது அவரவர் மனசாட்சியைப் பொருத்தது ஆகும். நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதும், ஒரு பக்தர் அல்லது பக்தர் அல்லாதவர் அதை எப்படிப் பார்ப்பார் என்பதுமே கேள்வி ஆகும் என்று கூறினார்.

 

Related Stories: