புதுடெல்லி: நீட் மறுதேர்வு கால அட்டவணை அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் கூறி உள்ளார். வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நடந்த நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நீட் மறுதேர்வை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பதே எங்களின் முயற்சி.
இதற்கான பணிகள் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும். மறுதேர்வு எழுதுவதற்கு மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஏற்கனவே செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும். வினாத்தாள் கசிவு சம்பவம் வேதனைக்குரியது. இது உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். இது ஒருதவறான நிகழ்வு. இதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்’’ என்றார். இதற்கிடையே, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
