கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியை தக்கவைத்தது. தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
கவுகாத்தி கானாப்ரா பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மற்றும் பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு மாநில ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பாரம்பரிய உடை அணிந்திருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா அசாம் மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
புதிய அமைச்சரவையில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுடன் பாஜவின் ரமேஷ்வர் தேலி, அஜஸ்தா நியோம், அசாம் கன பரிஷத்தை கட்சியை சேர்ந்த அதுல்போரா, போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த சரண் போரா ஆகிய நான்கு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர் உட்பட பதவியேற்ற அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அசாம் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை அலங்கரிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தருண் கோகோய் மட்டுமே தொடர்ந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அசாம் மக்களின் ஆசியுடன் நான் முதல்வராக பதவியேற்றேன். எனது அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றவும், அவர்களின் அனைத்து லட்சியங்களையும் தொடர்ந்து நிறைவேற்றவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
