சென்னை: சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலியாக அதிமுக தற்போது 2 ஆக உடைந்தது. எடப்பாடி தலைமையில் ஒரு அணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நாங்கள்தான் சட்டப்பேரவையில் உண்மையான அதிமுக என தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முக்கிய வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து 11வது தோல்வியை பெற்றுள்ளது. இதனால் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு, அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்தது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 எம்எல்ஏக்களில் சுமார் 30 பேர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் பரவியது.
மேலும், இந்த அணியினர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு 32 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் என்பதால், அதற்கான கணக்கீடுகளும் நடந்து வருகின்றன. இதற்காக 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்கள் தயாராகிவிட்டன. விரைவில் விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்க வேலுமணி, சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டு வருகிறனர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணியை கொண்டு வர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் அதிமுக உள்கட்சி மோதல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நாளிலேயே வெளிப்படையாக வெடித்துள்ளது. சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு தனித்தனி அணிகளாக வந்த சம்பவம், கட்சிக்குள் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை காட்டியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் பதவியேற்பு விழா நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் நடந்தது. இதில் அதிமுகவின் உள்கட்சி பிரச்னை அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும் வகையில் அரங்கேறியது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காலை 9.15 மணியளவில் சட்டசபைக்கு வந்தார்.
ஆனால், வழக்கமாக அவருடன் வரிசையாக வரும் எம்எல்ஏக்கள் பலர் அப்போது அவருடன் இல்லை. அவருடன் ஆதரவாளர்களாக கருதப்படும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே வந்திருந்தனர். இதற்கு மாறாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு பெரிய அணியாக அதிமுக எம்எல்ஏக்கள் காலை 9.25 மணியளவில் சட்டசபைக்கு வந்தனர். இதனால், அதிமுகவில் இரட்டை அதிகார மையம் உருவாகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருக்கான வரிசையில் இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்தார். கடந்த காலங்களில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்த பல எம்எல்ஏக்கள் இம்முறை வேறு வேறு இடங்களில் அமர்ந்தனர். எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவியேற்றபோது அதிமுக உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்ககையிலேயே மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால், எஸ்.பி.வேலுமணி பதவியேற்றபோது பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையைத்தட்டி வரவேற்றனர். இது சட்டசபை வளாகத்திலேயே கவனத்தை ஈர்த்தது. பதவியேற்பு முடிந்ததும், எஸ்.பி.வேலுமணி மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியிடம் வணக்கம் தெரிவித்தாலும், அருகில் அமராமல் தனி அணியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்க வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமரவேல், தளவாய் சுந்திரம், கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் நேற்று வழங்கப்பட்டது. அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் செயல்படுவர் என கூறப்பட்டிருந்தது. பேரவை கூட்டம் முடிந்ததும், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். ஆனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 30 எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரை சந்தித்தது குறித்து சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது ‘அதை சபாநாயகரிடம் சென்று கேளுங்கள்’ என்றார். தொடர்ந்து, ‘அதிமுகவில் நீடித்து வரும் மோதல் எப்போது முடிவுக்கு வரும்?’ என்று கேள்வி கேட்டபோது, ‘இரண்டு, மூன்று மணி நேரங்கள் காத்திருங்கள்’ என சி.வி.சண்முகம் பதிலளித்தார். அவரது இந்த மறைமுகமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த பதில், அதிமுகவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தபடி மாலை 6.05 மணிக்கு வேலுமணி தலைமையில் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட 30 அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ஒரு கடிதம் வழங்கினர். அந்த கடிதத்தில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும், சட்டமன்ற கட்சி துணை தலைவராக ஹரி, கொறடாவாக சி.விஜயபாஸ்கரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட முடிவு செய்துள்ளது உறுதியாகி உள்ளது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதுடன், அதிமுக 2ஆக உடைந்துள்ளது உறுதியாகி உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேலுமணி அணியினர் தவெக தலைமையில் 8 அமைச்சர்கள் பதவி கேட்டுள்ளதாகவும், அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், இவர்களை அதிமுக என அங்கீகரித்தால், அவர்களை பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கவும், பின்னர் நீதிமன்றம் செல்லவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
