100 நாட்களுக்கு பிறகு இன்று சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள அணை 119 அடி உயரம் கொண்டது. தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் இந்தாண்டு அணை முழு கொள்ளளவு எட்டியது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட விவசாயிகள் விவசாயத்திற்காக அணையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 31ம்தேதி விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக 330 கன அடி தண்ணீரும், வலது புற கால்வாய் வழியாக 220 கன அடி தண்ணீரும் மொத்தம் 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்றது. மேலும் இந்த தண்ணீரால் 89 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து 100 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை இன்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி 78.05 அடி தண்ணீர் உள்ளது. மீதமுள்ள தண்ணீர் திருவண்ணாமலை மாநகராட்சி தானிப்பாடி, புதுப்பாளையம், செங்கம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் அணையில் உள்ள பூங்கா பராமரிப்பு, முதலை பராமரிப்பு, மீன் வளர்ப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் தெரிவித்தார்.

Related Stories: