×

மும்பையை மீண்டும் வீழ்த்தி ஆர்சிபி முதலிடம்; எங்கள் பலத்திற்கேற்ப சிறப்பாக ஆடுவதே தாரக மந்திரம்: கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி

ராய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 54வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட இழப்பிற்கு 166 ரன் அடித்தது. அதிகபட்சமாக திலக்வர்மா 57, நமன் திர் 47, ரோகித்சர்மா 22 ரன் அடித்தனர். ஆர்சிபி பவுலிங்கில் புவனேஸ்வர்குமார் 4 ஓவரில் 23 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியில் கோஹ்லி, கோல்டன் டக்ஆக தேவ்தத் படிக்கல் 12, ஜேக்கப்பெத்தேல் 27, கேப்டன் ரஜத்படிதார் 8, ஜிதேஷ் சர்மா 18 ரன்னிலும், டிம் டேவிட் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேற அதிகபட்சமாக குருணல் பாண்டியா 46 பந்தில், 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 73 ரன் விளாசினார்.

கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்ட நிலையில், ராஜ் பாவா வீசிய அந்த ஓவரில் 3வது பந்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4 ரன்னில் அவுட் ஆனார். 4வது பந்தில் புவனேஸ்வர்குமார் சிக்சர் அடித்தார். கடைசி பந்தில் ரசிக் சலாம் 2 ரன் எடுக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்து ஆர்சிபி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. புவனேஸ்வர்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார். 11வது போட்டியில் 7வது வெற்றியுடன் ஆர்சிபி முதலிடத்திற்கு முன்னேறியது. மும்பை 8வது தோல்வியுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சீசனில் வான்கடேவில் மோதிய போட்டியில் வென்றிருந்த ஆர்சிபி நேற்று 2வது முறையாக மும்பையை வீழ்த்தியது.

வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது: இது மிகவும் விறுவிறுப்பான போட்டியாக இருந்தது, ஆனால் ஒட்டுமொத்தமாக, ஒரு சிறந்த ஆட்டம். குருணல் பாண்டியா சிறப்பாக ஆடினார். அவரிடம் நிறைய அனுபவம் இருக்கிறது, அதனால் தான் அவரை போன்றவர்கள் பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். புவனேஷ்வர் செயல்பாடு நம்பமுடியாதது. பந்தின் மீதான அவரது கட்டுப்பாடு அபாரமானது.

இதுபோன்ற பிட்ச்சில் புவி பந்தில் ஆடுவது மிகவும் கடினம். இப்போதைக்கு புள்ளிப் பட்டியலைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்கள் பலத்திற்கேற்ப சிறப்பாக விளையாடுவதே தாரக மந்திரம். பவுலர்கள் 166 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அபாரமாகச் செயல்பட்டனர். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், இந்தப் போட்டியில் வெற்றி பெறத் தகுதியானவர்கள் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால், எங்கள் பேட்டிங் வரிசையைக் கொண்டு, இந்த இலக்கை நாங்கள் எளிதாகத் துரத்தியிருக்க வேண்டும், என்றார்.

Tags : RCB ,Mumbai ,Rajat Patidar ,Raipur ,Mumbai Indians ,IPL ,
× RELATED ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான...