×

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்: வெயில் குறைந்து குளிர்ச்சி நிலவும்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும், வெயில் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 107 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். பொதுவாக மே மாதம் தமிழகத்தில் கத்திரி வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மழை கொட்டி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே வரும் நாட்களிலும் இந்த கிளைமேட் தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி சுமார் 5.8 கிமீ உயரம் வரை நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ளது. மேலும் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இவற்றின் காரணமாக தமிழகத்தில் வரும் 16ம்தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

நாளைய தினம் தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். வரும் மே 13ம் தேதி தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மே 14ம் தேதி தமிழகம் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேகமூட்டம் காரணமாக வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், மே 14ம்தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ந்த சூழல் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் தென்மாவட்டக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் மே 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று பலமாக வீசக்கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பாதுகாப்பு கருதி மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Bay of Bengal ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி