×

பண்ருட்டியில் பலா திருவிழா கோலாகலம்: 50க்கும் மேற்பட்ட ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி கீழ்மாம்பட்டு நாலோடை பகுதியில் ஆண்டுதோறும் மே மாதத்தில் உலக புகழ்பெற்ற பலா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு திடீர் மழை காரணமாக சாத்திப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் நேற்று பலா திருவிழா நடந்தது. விழாவில் 50க்கும் மேற்பட்ட ரகங்கள், அதிக கிலோ எடையுள்ள பலாப்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.பண்ருட்டி பலாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளவும், பலாவினுடைய இலை, பிஞ்சு, காய், பழம், பழத்தின் ஈக்கு, சுளை, கொட்டை, தொப்புள், மரம் இவைகளை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்து வருமானத்தை பன்மடங்காக பெருக்கிய பலா விவசாயிகளின் பட்டறிவு பகிரும் நிகழ்ச்சியும், பலாவின் பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சி, விற்பனை, ஆலோசனை ஆகியவைகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

பலா திருவிழாவில் பலாச்சுளை சாறு, பலாக்கொட்டை அவியல், பலாச்சுளை ஐஸ்கிரீம், பலா வத்தல், பலாச்சுளை அல்வா, நாட்டுப் பலாக் கன்றுகள், பலா இசைக்கருவிகள், பலாச்சுளை, பலா பிரியாணி, பலா பிஸ்கட், பலா பஜ்ஜி, பலா சாக்லேட் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மரபு அரிசி, அவல் வகைகள். நாட்டு சர்க்கரை, மரசெக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், தின்பண்டங்கள், நாட்டு காய்கறி, கீரை விதைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு வடிவங்களில் கருத்துகளை தாங்கிய துணி பைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். தொடர்ந்து அதிக சுவையுடைய பலா மற்றும் அதிக எடையுடைய பலா உரிமையாளர் தேர்வு செய்யப்பட்டு பரிசுப் பொருட்களுடன் கௌரவிக்கப்பட்டனர். மரபு நெல் இரகங்களின் கண்காட்சி மற்றும் மரபு மரங்களின் விதைகள் கண்காட்சியில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பண்ணுருட்டி பலா மேம்பாட்டுக் குழு, தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தினர் செய்திருந்தனர்.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பலாச்சுளை மதிப்பு கூட்டுதல், கருத்தரங்குகள் மற்றும் பலாச்சுளை உண்ணும் போட்டிகள் நடத்தப்பட்டன. பண்ருட்டி பலா திருவிழாவில் பல்வேறு வகையான பலா காய்கள் மற்றும் பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி சந்தை வாய்ப்பு மற்றும் பலா சாகுபடி ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் பலாச் சுளை உண்ணும் போட்டி, கருத்தரங்கம் போன்றவை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பலா திருவிழாவை கண்டுகளித்தனர்.

Tags : Jackfruit festival ,Panruti ,Jackfruit ,Nalodai ,Kilmampattu, Panruti, Cuddalore district ,Sathiput ,
× RELATED தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள்...