திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் வளாகத்தில் உள்ள வள்ளி குகை தற்போது புதிய வண்ண ஓவியங்களால் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் நிலையில், இந்த ஓவியங்கள் கோயிலுக்கு கூடுதல் ஆன்மிக அழகை சேர்த்துள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 90% மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள பணிகள் தற்போது தீவிரமாக முன்னடுக்கபட்டு வருகின்றன. இந்த பணிகளில் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி குகை பகுதியும் புதுப்பிக்கபட்டு வருகிறது.
கோயிலின் பின்புற வாசலில் இருந்து வள்ளி குகைக்கு செல்லும் பாதை முழுவதும் வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு முருகன் வள்ளி தெய்வானை தொடர்பான புராண வரலாற்றை காட்சியாக உணர்த்தும் வகையில் இந்த ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டன. வண்ணங்களின் செழுமையும், காட்சிகளின் உயிரோட்டமும் அங்கு செல்லும் பக்தர்களை கவர்கின்றன.
வேட்டையாடும் ரூபத்தில் முருகப்பெருமான் காட்டுக்குள் செல்வது அங்கு வள்ளியை முதல்முறையாக கண்டது பின்னர் வளையல் வியாபாரி வேடத்தில் வந்து வள்ளிக்கு வளையல் வழங்குவது போன்ற காட்சிகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அதேபோல யானை வள்ளியை துரத்துவது அதனை கண்டு வள்ளி குகைக்குள் நுழைவது போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
இக்காட்சிகள் முருகன் வள்ளி வரலாற்றின் முக்கிய தருணங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன. மேலும், தன் இயல்பான திருவுருவத்தில் முருகப்பெருமான் காட்சியளிப்பது, யானை அங்கிருந்து விலகி செல்வது, வள்ளியும் அவரது உறவினர்களும் முருகப்பெருமானுக்கு நன்றி தெரிவிப்பது பின்னர் முருகன் வள்ளி திருமணம் நடைபெறும் காட்சிகளும் ஓவியங்களில் இடம்பெற்றுள்ளன.
தற்போது புதியதாக வரையப்பட்ட வர்ண ஓவியங்களில் வள்ளி குகைக்கு வரும் பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். பலர் அந்த இடத்தில் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து நினைவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
