சென்னை: சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற பின் முதல்வர் விஜய் பேசியதாவது:
சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடையவேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குனருக்கு பிறந்த ஒரு பிள்ளையான எனக்கும், வாழ்க்கையில் வறுமை என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்தெல்லாம் வந்துவிடவில்லை. உங்களை மாதிரிதான். உங்களில் ஒருவர் மாதிரிதான். உங்கள் குடும்பத்தில் ஒருவர் மாதிரிதான். உங்கள் பிள்ளை மாதிரிதான். உங்கள் மகன் மாதிரிதான். உங்கள் அண்ணன் மாதிரிதான். உங்கள் தம்பி மாதிரிதான். அப்படிதான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தை கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை அவ்வளவு அன்பாக, அவ்வளவு உறவாக என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
நான் ஒன்றும் தேவ தூதன் எல்லாம் கிடையாது. நானும் ஒரு இயல்பான வாழ்க்கை வாழும் ஒரு சாதாரணமான மனிதன்தான். நான் முன்பே சொன்னது மாதிரி, அது செய்வேன், இது செய்வேன் என்று பொய்யான வாக்குறுதிகள் எல்லாம் கொடுத்து உங்களை நான் ஏமாற்றமாட்டேன். எது சாத்தியமோ அது மட்டும்தான் நான் செய்வேன். உடனே, உங்கள் மனதில் ஒரு கேள்வி ஒன்று வரலாம். அப்போது, சாத்தியம் இல்லாததை செய்ய மாட்டார்களா, செய்ய முடியாதா அப்படி என்ற ஒரு கேள்வி ஒன்று வரலாம். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும்போது, எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் அந்த கான்பிடன்ஸ் என் மனதில் இருக்கிறது.
இன்னொரு விஷயமும் நான் இங்கு சொல்ல வேண்டும். இன்றைக்கு தமிழ்நாடு அரசுக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது. கஜானாவை சுத்தமாக துடைத்து, வழித்து வைத்துவிட்டு போயிருக்கும்போது தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கும்போது, அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் இந்த பொறுப்பை நம்முடைய கையில் எடுத்திருக்கிறோம். இதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய ஒரு பொறுப்பை என் கையில் கொடுத்திருக்கிறீர்கள். அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் அவகாசமும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நான் தயவு பண்ணி கேட்டுக்கொள்கிறேன். நான் சொன்னதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன்.
பெண்கள் பாதுகாப்பு மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக வைத்திருப்பேன். போதைப்பொருள் கலாசாரம் அதை கண்ட்ரோல் செய்வதற்கு என்னென்ன ஸ்டெப்ஸ் எடுக்க வேண்டும், என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை இன்றிலிருந்தே எடுப்பேன். சட்டம் ஒழுங்கு எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும், எட்டு கோடி மக்களும் என் மக்கள்தானே.
அடிப்படை விஷயங்கள் கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி இந்த மாதிரி விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம் செலுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நான் தொடமாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. நாம் ஜெயித்துவிட்டோம். ஒரு ஆட்டம் ஆடி பார்க்கலாம் அப்படி என்ற எண்ணம் யாருக்காவது இருந்தது என்றால், இப்போதே இந்த நிமிடமே அதை எரேஸ் பண்ணிவிடுங்கள்.
ஒரே சென்டர் தான். என் தலைமையில் உண்டான சென்டர். இந்த பக்கம் ஒரு பவர் சென்டர், அங்கு ஒரு பவர் சென்டர். அதெல்லாம் கிடையவே கிடையாது. இப்போதே சொல்லிவிடுகிறேன்.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள், மீனவர்கள் எல்லோருமே நம்முடைய டிவிகே அரசில் நன்றாக இருப்போம், நன்றாக இருப்போம், நன்றாக இருப்போம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜயினுடைய முகம். அதில் 100% நீங்கள் இந்த விஜயை நம்பலாம். இப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்த மக்கள் உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றொருவருக்கும் முக்கியமாக நான் நன்றி சொல்ல வேண்டும். அது, இந்த விஜய் மாமாவுடைய குட்டி நண்பா நண்பீஸ்களால் தான் இது நடந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி கடன் செய்ய வேண்டும். உங்களுக்காக உங்கள் எதிர்காலத்தை மனதில் வைத்துக்கொண்டு எல்லா நல்ல விஷயங்களையும் உங்களுக்காக இந்த விஜய் மாமா செய்து கொடுப்பான். கான்பிடென்ட்டாக இருங்கள். அதே மாதிரி தமிழக வெற்றிக் கழக தோழர்களே, உண்மையிலே சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் இல்லையென்றால், எதுவுமே இல்லை. என்னுடைய கட்சி தோழர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், வாக்குச்சாவடி முகவர்களுக்கும், மை டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பிரஷ் கவர்னன்ஸ், ஒரு நியூ கவர்னன்ஸ் ஒன்று கொடுப்போம். கான்பிடென்ட்டாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, இல்லை இல்லை மீண்டும் மீண்டும் சந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

