நகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று அளித்த பேட்டி:
புதுச்சேரி போன்ற 30 எம்எல்ஏக்களை கொண்ட சிறிய பகுதிக்கும், 90 எம்எல்ஏக்களை கொண்ட காஷ்மீர் போன்ற பெரிய பகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க முடியவில்லையா? கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் தற்போதைய இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீருக்கு நன்மை தரும் என நீங்கள் நம்புகிறீர்களா? சட்டம் ஒழுங்கை காப்பதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை விலக்கி வைப்பது எந்த நன்மையும் வழங்காது.
இத்தகைய இரட்டை அதிகார கட்டமைப்பு கொண்ட சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேச அரசாங்கம் என்பது மிக மோசமான வடிவம். அதை மாற்றி முழு மாநில அந்தஸ்தை விரைவில் வழங்க வேண்டும். மேலும், ஜம்முவுக்கும் நகருக்கும் இடையே அரசியல் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் சுயநல சக்திகள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் இனியும் தோல்வி அடைவார்கள். தலைநகரை 2 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றும் பாரம்பரிய நடைமுறை மீண்டும் கொண்டு வருவது இரு பிராந்தியத்திற்கும் இடையேயான உணர்வுப்பூர்வ பிளவை குறைப்பதில் முக்கிய பாலமாக அமையும் என்றார்.
