×

எதிரியா? நண்பனா? முதலாளியா? தொழிலாளியா?

ஆறாம் பாவம் என்பது ஜாதகத்தில் நோய்கள், கடன், எதிரிகள், சேவை, போட்டி, வேலை, உழைப்பு, தண்டனை போன்றவற்றைக் குறிக்கும். 6ம் பாவம் மற்ற பாவங்களோடு இணைந்தால், அந்த பாவத்தின் காரியங்களில் சவால் + போராட்டம் + வெற்றி வாய்ப்பு என்ற கலவையான பலன் உருவாகும். இது ஆறாம் பாவகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. ஆறாம் பாவத்தில் உள்ள கிரகங்கள், வாங்கிய நட்சத்திர சாரங்கள், போன்ற பல விஷயங்கள் ஆறாம் பாவத்தின் சுப அசுபத் தன்மையைச் சொல்லும். சுபத்தன்மை ஆறாம் பாவத்தின் நேர்மறை பலன்களான போட்டி தேர்வில் வெற்றி, எதிரிகளை வெல்வது, வழக்கில் வெற்றி முதலியவற்றைக் காட்டும். அசுபத் தன்மை என்பது நோய், வழக்கு, கடன் பிரச்னை போன்ற காரணிகளைக் காட்டும்.
இப்பொழுது பொதுவாக இது 12 பாவங்களோடு 6 தொடர்பு கொள்ளும் போது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம். ஆறாம் பாவகம் லக்னத்தோடு தொடர்பு கொண்டால், உடல்நிலை சிக்கல்கள் வரலாம். ஆனால் எதிரிகளை ஜெயிக்கும் சக்தி இருக்கும். வாழ்க்கை முழுவதும் போராட்டம் இருந்து, இறுதிச்சுற்றில் வெற்றி கிடைக்கும். அதாவது எதையும் போராடித்தான் வெல்ல வேண்டி இருக்கும்.
இவர்களை யாரும் உருவாக்கத் தேவையில்லை, தானாகவே தன்னை சுயம்புவாக உருவாக்கிக் கொள்வார்கள். இயல்பாகவே போராட்ட குணமும், எதிர்ப்புகளைச் சந்திக்கும் துணிச்சலும் இருக்கும். என்னுடைய நண்பருக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் சனி. ஆறாம் இடத்தில் சூரியன். 1,6 பரிவர்த்தனை என்பது நல்ல பரிவர்த்தனை அல்ல. ஆரம்பத்திலிருந்து இவருக்கு குடும்பத்திலிருந்து எந்த ஆதரவும் இல்லை. இவரே சம்பாதித்து ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்கிறார். கடன் இருக்கிறது. போராட்டம் இருக்கிறது. அவ்வப் பொழுது வெற்றியும் இருக்கிறது. தன்னைத்தானே உருவாக்கி கொண்டவர். இன்றைக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆறாம் பாவம் இரண்டாம் பாவகத்தோடு தொடர்பு கொண்டால், பொருளாதார ரீதியாக அற்புதமான பலன் கிடைக்கும். உழைப்பால் பணம் சம்பாதிப்பார்கள்.
ஆனால் கவனக்குறைவாக இருந்தால், கடன் சம்பாதித்து விடுவார்கள். இரண்டு என்பது பணத்தையும் குடும்பத்தையும் குறிக்கும் இடம் என்பதால், இந்த இரண்டிலும் கவனம் இருக்க வேண்டும். பேசுவதே சண்டை போடுவது போல இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். பண வரவு இருந்தாலும், அது கடன் மூலமாகவோ அல்லது வழக்குகளின் மூலமாகவோ வர வாய்ப்புண்டு. கண் தொடர்பான உபாதைகள் வரலாம். மூன்றாம் பாவம் துணிச்சலைக் குறிக்கும். உபஜெயஸ்தானம் என்றார்கள்.
மூன்றும் ஆறும் சேரும்பொழுது துணிச்சலோடு செயல்படுவார்கள். ஆனால், இந்த இணைப்பு சகோதரர்களோடு பிரச்னை இருக்கும் படி தூண்டும். குறிப்பாக இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கடுமையான உழைப்பு தேவைப்படும். தகவல் தொடர்பு அல்லது எழுத்துத் துறையில் எதிர்ப்புகள் தோன்றும். ஒரு உதாரண ஜாதகம். கன்னி லக்கினம். செவ்வாய் நான்காம் இடத்தில் ராகுவோடு. ஆறுக்குரிய சனி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில். ஆறாம் இடத்து சனி மூன்றாம் பார்வையாக செவ்வாய் ராகுவை பார்க்கும்.
6க்கும் மூன்றுக்கும் (சனி + செவ்வாய்) தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இவருக்கும் இவருடைய இளைய சகோதரருக்கும் தொடர்பு இல்லை; பேச்சு வார்த்தை இல்லை.
ஆறாம் பாவகம் நாலாம் பாவகத்தோடு தொடர்பு கொண்டால் வீடு மனையில் பிரச்னை இருக்கும். கடன் வாங்கி வீடு கட்ட வேண்டி இருக்கும். சில நேரங்களில் கடனை அடைக்க முடியாது. சொத்து தொடர்பான வழக்குகள் இருக்கும். தாயின் உடல்நிலையில் சங்கடங்கள் இருக்கும். வசிக்கும் இடத்தில் அமைதியற்ற சூழல் நிலவக்கூடும். ஆறாம் பாவகம் ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு கொண்டால், படிப்பில் இடையூறு ஏற்படலாம். பிள்ளைகள் தொடர்பான கவலை வரலாம். காதல் பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடங்கள் தரலாம். சூதாட்டம் அல்லது பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பூர்விகச் சொத்துக்களில் சிக்கல் வரலாம். ஆறாம் பாவகம் தன் பாவகத்தில் (ஆறில் ஆட்சி உச்சம், சுப கிரக பார்வை) போன்றவற்றால் சுபத்துவமாக இருந்தால், `ஹர்ஷ யோகம்’ எனப்படும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல் மருத்துவம், போலீஸ் துறை போன்ற வேலைவாய்ப்பு, அரசு வேலை உண்டு. நோய் ஏற்பட்டாலும் குணமாகும் சக்தி இருக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல், சிறந்த ஆரோக்கியம் மற்றும் அரசு வழியில் நன்மைகள் கிடைக்கும். அடிமைத் தொழில் செய்யாமல் அதிகாரம் செய்வார்கள். ஆறாம் பாவம் ஏழாம் பாவத்தோடு தொடர்பு கொண்டால் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டுத் தொழிலில் (Partnership) ஏமாற்றங்கள் அல்லது வழக்குகள் வர வாய்ப்புண்டு.
வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். ஆறாம் பாவம் எட்டாம் பாவத்தோடு தொடர்பு கொள்வதால், நன்மையான பலன்களைவிட தீமையான பலன்களே அதிகம். காரணம் இரண்டும் வீரியமுள்ள பாவங்கள். அதாவது கத்தி போன்ற பாவங்கள். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் விபத்து, கண்டம் போன்ற பிரச்னைகளைத் தந்துவிடும்.
திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும். நேர்முகமான எதிரிகளைவிட மறைமுகமான எதிரிகள் இருப்பார்கள். இதில் இருக்கக்கூடிய ஒரே நல்ல விஷயம், ஆய்வுத் துறையில் கவனம் செலுத்தினால் முன்னேறலாம்.
இரண்டாவதாக இன்சூரன்ஸ் போன்ற பலன்கள் இவர்களுக்குக் கிடைக்கும். இன்னொரு கோணத்தில் இது `விபரீத ராஜயோகம்’. பெரும் விபத்துக்களிலிருந்து தப்பித்தல், எதிர்பாராத உயில் சொத்து கிடைத்தல் போன்றவையும் நடக்கும். ஆனால் தீராத நீண்ட கால நோய் (chronic) ஏற்படலாம். ஆறாம் பாவகம் ஒன்பதாம் பாவகத்துடன் இணைந்தால், பாக்கியம் தாமதமாகும். ஒன்பது தந்தை அல்லவா! எனவே தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். தந்தைக்கு கடன் தொல்லை ஏற்படலாம். தர்ம காரியங்கள் செய்வதில் தடைகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆறாம் பாவகம் பத்தாம் பாவகத்தோடு சேரும்பொழுது, அரசு வேலை அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களின் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஒரு உதாரண ஜாதகம். கும்ப லக்கனம். ஆறுக்குரிய சந்திரன் 10ல் நீசம்.
ஆனாலும் செவ்வாய் உச்சம் அடைந்ததால், நீச பங்கமாகி நல்ல வேலை கிடைத்தது. இதில் உள்ள சிக்கல், மேல் அதிகாரிகளோடு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் சட்டம், மருத்துவம் அல்லது காவல் துறையில் பணிபுரியும் வாய்ப்பைத் தரும். 6ம் பாவகம் 11-ஆம் பாவகத்தோடு தொடர்பு கொண்டால், மூத்தவர்களால் சிக்கலையும், போட்டித்தேர்வுகளில் வெற்றிகளையும், நண்பர்களால் பிரச்னைகளையும் பெற வாய்ப்பு அதிகம். 12-ஆம் பாவகத்தோடு தொடர்பு கொண்டால், எட்டாம் பாவகத்திற்குரிய அவ்வளவு விஷயங்களும் நடக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்து ஏழாம் பாவகத்துக்குள் நுழைவோம்.

Tags :
× RELATED எதிர்கொள்பாடி ஐராவதீஸ்வரர் கோயில்