×

உலகத்தை அளந்த உலகளந்த பெருமாளின் அருகில் அனுமன்!

பகுதி 1

மகான் ஸ்ரீ வியாசராஜர், சில அனுமன்களை பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் உள்ளே பிரதிஷ்டை செய்திருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்ய அனுமன்களில் மிக முக்கிய அனுமன், திருக்கோவிலூரில் திரிவிக்ரமஸ்வாமி கோயிலில் அருள்பாலித்து வருகிறார். திருக்கோவிலூர் பற்றியும், திரிவிக்ரமரை பற்றியும், திரிவிக்ரமஸ்வாமி கோயிலின் சிறப்புகளை பற்றியும், இங்கே உள்ள வீர ஆஞ்சநேயரை பற்றியும், இன்னும் பல சந்நதிகளை பற்றியும் விலாவாரியாக இந்த தொகுப்பில் காணலாம்.
2000 ஆண்டுகள் பழமை
108 திவ்ய தேசங்களில், திருக்கோவிலூர் திரிவிக்ரமஸ்வாமி கோயில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற வைணவ க்ஷேத்திரமாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல்லவ மன்னர்களால் இவ்வூரில் கோயில்களும், கோபுரங்களும் கட்டப்பட்டிருக்கிறது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. மேலும், பல்லவ மன்னர்களும், விஜயநகர சாம்ராஜ்ய அரசர்களும் இக்கோயிலைக் கட்டியும் புதுபித்தும் ஆராதித்தும் வந்ததாக, கல்வெட்டுகள் தெரியப்படுத்து கிறது. இந்த க்ஷேத்திரம், புராண காலத்தில் `பஞ்சகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்’ என்று சொல்லப்படுகின்ற;
* திருக்கோவிலூர்,
* திருக்கண்ணபுரம்,
* திருக்கண்ணங்குடி,
* திருக்கண்ணமங்கை,
* திருக்கண்ண கவித்தலம்.
ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களில் ஒன்று என்று `பிரம்ம புராணம்’ விவரிக்கிறது. மேலும், திருக்கோவிலூரை புராண காலத்தில் `கிருஷ்ண க்ஷேத்திரம்’ என்றும் ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மக்கள் `திருக்கோவிலூர்’ என்றே அழைத்து வருகிறார்கள். இக்கோயிலில், மூன்று பெரிய கோபுரங்கள் அழகாக உயர்ந்து காட்சி யளிக்கின்றது. அதே போல், கோயில் உள்ளே பல பெரிய மண்டபங்களும், சந்நதிகளும் இருக்கின்றன. திருக்கோவிலூர் `ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகளின் வழியில் சுமார் 500 வருடங்களாக இக்கோயிலின் நிர்வாகம் இயங்கி வருகிறது. முக்கிய சிறப்பம்சமாக, திரிவிக்ரமஸ்வாமியை முதல் முதலில், தமிழ் பாசுரங்களினால் பாடியவர்கள் முதலாழ்வார்கள்.
அர்ஜுனன் நீராடிய தலம்
`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதனை நிரூபித்த பரசுராமர், இத்தலத்தில் தவம் செய்ததாக புராணமும், அகத்தியர் முனி இங்கு தவமியற்றியதாக தமிழ் இலக்கியங்களும் பெருமையோடு கூறுகின்றன. அது மட்டுமா! துவாபர யுகத்தில், அர்ஜுனன் தீர்த்த யாத்ரை மேற்கொண்ட போது, திருக்கோவிலூருக்கு வந்து, தென்பெண்ணை ஆற்றில் நீராடி திரிவிக்ரமஸ்வாமியை மனமுருகி வழிபட்டதாக `வில்லிபாரதம்’ தெரிவிக்கிறது. அகநானூறு பாடல்களில், திருக்கோவிலூர் மற்றும் தென்பெண்ணையாறு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
தமிழ் நூல்களில் திருக்கோவிலூர்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான, `மலையமான் திருமுடிக்காரி’ என்ற அரசர், முன்னொரு காலத்தில் திருக்கோவிலூரை ஆண்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மலையமானுக்குச் சொந்தமான இடம் திருக்கோவிலூருக்கு அருகில் இருந்ததாகவும், அந்த இடத்தின் பெயர் `முள்ளூர்க்கானம்’ என்றும் `குறுந்தொகை’ கூறுகிறது.
இதனால் மலையமான், `முள்ளூர் பெற்றிருந்தான்’ என்றும் கூறுவர். அதன் பின், அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னர், திருக்கோவிலூரை கைப்பற்றியதாக புறநானூறில் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக.. திருக்கோவிலூரின் சிறப்புகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்!
பிரம்மதேவரிடத்தில் கூறுதல்
வியாச சீடரும், மஹா ஞானியும், ஹரியின் மீது அதீத பக்தியை கொண்ட சௌனகரிடம்,
“ஸ்வாமி சிறந்த திவ்ய தேசங்களின் மகிமையை எனக்கு சொல்லுங்கள்’’ என்று குக்ஷி என்னும் முனிவர் பிரார்த்திக்கிறார்.
“நிச்சயமாக கூறுகிறேன். வாமதேவர் மூலமாக என்னால் எது எது கேட்கப்பட்டதோ அப்படியே சொல்லுகிறேன்’’ என்றார் சௌனகர். மெதுவாக சொல்லவும் தொடங்கினார்.
ஒரு சமயம் விஷ்ணுபகவான், பிரம்மதேவரிடத்தில் ஸ்ரீ முஷ்ணம், விஷ்ணுசயனம், ஸ்ரீ ரங்கம், விஷ்ணுசயனத்தில், கிருஷ்ணக்ஷேத்திரம், ஸ்ரீ ஸம்க்ஞாமலகம் ஆகிய க்ஷேத்திரங்களில் நான் வசிக்கிறேன். அவைகளில் ஸ்ரீ முஷ்ணத்தில் வராஹமூர்த்தியாகவும், விஷ்ணுசயனத்தில் ராமனாகவும், ஸ்ரீ ரங்கத்தில் சேஷசாயியாகவும், ஸ்ரீ நிகேதனத்தில் ஸ்ரீ தரனாகவும், ஸ்ரீ ஸம்க்ஞாமலகத்தில் புருஷோத்தமனாகவும், கிருஷ்ணக்ஷேத்திரத்தில் (திருக்கோவிலூரில்) கண்ணனாகவும் காட்சியளிக்கிறேன். இந்த க்ஷேத்திரங்களில் எவர் ஒருவர் வசிக்கின்றார்களோ அவர்கள், எனது திருநாட்டில் தேவர்களால் பூஜிக்கப்படுவார்கள். அனைவரும் இந்த அனைத்து க்ஷேத்திரங்களையும் அவசியம் சேவிக்க ேவண்டும்.
இதனைக் கேட்ட மகிழ்ச்சியில் இருந்த பிரம்மதேவர், திருக்கோவிலூருக்கு சென்றார்.
“உங்களுடைய பல திவ்ய க்ஷேத்திரங் களில், விசேஷமாக எந்த க்ஷேத்திரத்தில் உம்மை தரிசிக்கலாம்?’’ என்று வினவினார். அதற்கு விஷ்ணுபகவான்;
“க்ஷேத்திரங்களுள் கிருஷ்ணக்ஷேத்திரமே (திருக்கோவிலூர்) மிகவும் சிறந்தது. அதற்கு நிகரான க்ஷேத்திரங்களே கிடையாது. கிருஷ்ணக்ஷேத்திரத்தில், நான் மிகவும் மனமுகந்து பக்தர்களின் விருப்பத்திற்காக வசிக்கிறேன். ஆகையால், அங்குள்ள நதிகளில் ஸ்நானம் செய்து ஜபம், பாராயணம் முதலியவைகளை நடத்தினால் அனந்தமான பலன் கிடைக்கும்’’ என்றார். இதனைக் கேட்டவுடன் பிரம்மதேவர், கிருஷ்ணக்ஷேத்திரத்தை (திருக்கோவிலூர்) அடைந்து, சஹ்யமலையிலிருந்து உற்பத்தியாகும் `கிருஷ்ணபத்ரா’ என்னும் தென்பெண்ணை ஆற்றைக் கண்டார். பிறகு முனிவர்களுடன் விஷ்ணுவை இருதயத்தில் தியானித்துக் கொண்டு, `ஓம் நமோ நாராயணாய..’’ என்னும் திருவஷ்டாக்ஷரத்தை ஜபித்துக் கொண்டே தீர்த்தத்தை சிரசில் தெளித்துக்கொண்டு (புண்ணியநதிகளில், தலையில் தண்ணீரை தெளித்துக்கொண்ட பின்னர்தான் கால்களை நதியில் வைக்க வேண்டும்) தீர்த்தமாடினார்.
பிரம்மதேவரின் பூஜை
இவ்வாறு தீர்த்தமாடி நித்ய கடமைகளை செய்து முடித்த பிறகு, திவ்யமாக திருக்கோயிலைக் கண்டு, அதனுள் சென்று தேஹளீசனான பகவானை தரிசித்தார். (தேஹளீசன் என்பது விஷ்ணுவின் சிறப்புப் பெயர்களில் ஒன்று) சங்கு, சக்கரம் இவைகளை தரித்தவனும், தாமரை போன்ற முகமுடையவனும், கிருபாநிதியும் பீதாம்பரதாரியும், சர்வாபரணங்களும் அணிந்தவனும், ஸ்ரீ தேவியாலும், பூதேவியாலும் இருபுறமும் சேவிக்கப்படுகின்றவனும், எதிரில் கருடனால் சேவிக்கப்படுகின்றவனுமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை கண்ணாரக் கண்டு சேவித்து தனது நான்கு முகங்களையும் தாழ்த்திப் பணிந்து துதிக்கின்றார், பிரம்மதேவர்! அதன் பிறகு, பகவானை பக்தியுடன் புஷ்பம் சந்தனம், தூப தீபம், நிவேதனம், தாம்பூலம் முதலியவைகளால் ஆராதித்து, பிரதட்சண நமஸ்காரங்களையும் செய்தார். அப்பொழுது பகவான் மிகவும் மனமுகந்து, பிரம்மாவைப் பார்த்து கம்பீரமான குரலுடன் பேசத் தொடங்கினார் “பிரம்மதேவனே! உனது பக்தியினாலும், பூஜையினாலும், துதியினாலும் மிகவும் மனமகிழ்ந்தேன். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும்கூட கிடைக்காத என் தரிசனம், சிறந்த பக்தியினாலேயே உமக்குக் கிடைத்தது. இவ்வாறு தினமும் இந்த விமானத்தில் எழுந்தருளியிருக்கும் என்னை பூஜை செய்து வருவீராக, உமக்கு வேண்டிய வரங்களைத் தருவேன்.
இவ்வாறு பகவானின் அமுத வாக்கைக் கேட்ட பிரம்மன், மிகவும் மனமுருகி தலைதாழ்த்தி அடிபணிந்து கைகுவித்துப் பிரார்த்தித்தான். இன்றும் பிரம்மதேவர் இக்கோயிலில் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அடுத்து… இக்கதை அனைவருக்கும் நன்கு தெரிந்ததே.. (சுருக்கமாக காணலாம்)
மூன்றாவது அடி
சிறுவனாக அதாவது வாமன மூர்த்தியாக மகாபலியிடம் யாசகம் கேட்கிறான். இதனை அறிந்துகொண்ட சுக்ராச் சாரியார்,
“மன்னா.. சிறுவனாக வந்திருப்பது சாட்சாத் விஷ்ணுவேதான். கவனமாக இருங்கள்’’ என்று தனது சீடனான மகாபலியிடத்தில் சுக்ராச்சாரியார் எச்சரிக்கிறார்.
“குருதேவா… திருமகளான லட்சுமி
தேவியின் கேள்வன் (தலைவன்/கணவன்) நாராயணனே என்னிடம் கை நீட்டி தானம் வாங்குவது எனக்குப் பெருமையே!’’ என்று குரு சுக்ராச்சாரியாரை மீறி வாமனர் கேட்ட மூன்று அடியை தானமாக தர ஒப்புக்கொண்டுவிட்டார். மறுநொடியில், தன் வாமன ரூபத்தைவிட்டு, விராட்புருஷ அதாவது விஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு, மிகப்பெரிய ஒரு திருவடியால் பூமியையும், மற்றொரு திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார். இந்த ரூபம்தான் திரிவிக்ரம அவதாரம் என்றும், வாமன அவதாரம் என்றும் கூறப்படுகிறது. இந்த திரிவிக்ர ரூபத்தைக் கண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், கின்னரர்கள் (கின்னரர் (Kinnara) என்பவர்கள், இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும், இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள்) ஆகிய அனைவரும் பலவாறு துதித்துக் கொண்டாடினார்கள்.
தலையை கொடுத்த மகாபலி
மேலும், பிரம்மதேவன் உயரத் தூக்கப்பட்ட விஷ்ணுவின் திருவடியில், தனது கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தினால் பாதபூஜை செய்து பூஜித்தார். அந்த பாதபூஜை செய்த தீர்த்தமே கங்கையென்னும் பெயருடன் உலகில் பெருகி ஓடுகிறது.
மூன்று அடி தருவதாகச் சொன்ன மகாபலியிடம்;
“மன்னா… நீ மூன்று அடி நிலத்தை தானமாக தருகிறேன் என்றாய்.. இதோ… ஒரு அடி பூமியையும், இன்னொரு அடி விண்ணுலகத்தையும் அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை நான் எங்கே அளப்பது?’’ என்று பகவான் கேட்க;
“பகவானே… பரமாத்மா… உன் விஸ்வரூபத்தையே நீ எனக்கு காட்டிவிட்டாய். வேறென்ன எனக்கு வேண்டும்? இதோ என் தலையையே உனக்குத் தருகிறேன். மூன்றாவது அடியாக நீ என் தலையை அளந்துகொள்!’’ என்று மகாபலி சொல்ல… உடனே பகவானும், மகாபலியின் தலைமேல் தனது திருவடியை வைத்து. மூன்றாவது அடியை அளக்கிறார். அதன் பின் மகாபலியை அனுகிரகம் செய்கிறார்.
(அடுத்த இதழில் தொடரும்…)

Tags : Anuman ,Lord ,Sri Vyasarajar ,Anumans ,Trivikramaswamy Temple ,Thirukovilur ,Trivikramar ,Trivikramaswamy ,
× RELATED தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?