×

தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?

?சிலர் காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்கிறார்களே, இதன் தாத்பர்யம் என்ன?
– டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
பொதுவாக திருஷ்டி தோஷம் நீங்குவதற்காக கருப்பு கயிறினை கட்டுவார்கள். ஒரு சிலரை பெரிய மனிதர்களாக நினைத்து பலரும் அவரது காலில் விழுந்து வணங்குவார்கள். அவ்வாறு பலரும் வணங்கும்போது வணங்குபவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தியானது அந்த வணங்கப்பெறும் மனிதரிடம் சென்று சேர்ந்துவிடும் என்பதால், அந்த மனிதர்கள் தங்களை எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள கருப்பு கயிறினை காலில் கட்டிக் கொள்வதும் வழக்கத்தில் உண்டு. கருப்பு கயிறு என்பது எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வல்லது என்பது நமது நம்பிக்கை என்பதே உங்கள் வினாவிற்கான நேரடியான பதில்.

?தில்லை கோயிலில் திருமறைகள் யாரால் எதற்காக வைக்கப்பட்டன?
– மல்லிகா அன்பழகன், சென்னை.
சமயக்குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமானை தரிசித்து பாடிய பதிகங்கள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பாடல்கள் அனைத்தும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு அவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், தில்லைசிதம்பரம் திருக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் உள்ள ஒரு ரகசிய அறையில் வைக்கப்பட்டன. வேதத்திற்கு இணையாக இவைகள் திருமறைகள் என்ற பெயரோடு அழைக்கப்பட்டதால் அவை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அக்காலத்தில் உண்டான பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் எழுச்சியிலிருந்து நமது திருமறைகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்பட்டது என்று சொல்வோரும் உண்டு.
அனைத்து சிவாலயங்களில் இருந்தும் தெய்வ சாந்நித்யம் என்பது அர்த்தஜாம பூஜை முடிந்ததும் தில்லை சிதம்பரம் திருத்தலத்தில்தான் ஒடுங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாலும் தில்லை திருத்தலமே சிவாலயங்களில் முதன்மையான தலம் என்று கருதப்படுவதாலும் தில்லைவாழ் அந்தணர்களின் ஒற்றுமையும் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பக்தியும் இத்திருமறைகளை பத்திரமாக பாதுகாக்கும் என்ற எண்ணத்துடனும் அங்கே சென்று வைக்கப்பட்டதாகவும் சொல்வார்கள்.
ஆனால் இவற்றை யார் இங்கு கொண்டு வந்து வைத்தது என்பதற்கான தெளிவான விடை கிடைக்கவில்லை. ஆனால், இவற்றை மீட்டெடுத்தது ராஜராஜசோழன் என்பதற்கான வரலாற்றுச் சான்று உள்ளது. நம்பியாண்டார் நம்பி அவர்களின் துணையோடு திருமறைகள் தொகுக்கப்பட்டன என்பதும் நாம் அறிந்ததே.

?காலில் தங்கக் கொலுசு அணியக்கூடாது என்று சொல்வது உண்மையா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உண்மையே. தலை முதல் இடுப்பு வரை உள்ள ஆபரணங்கள் மட்டுமே தங்கத்தில் அணிய வேண்டும். கிரீடம் முதல் ஒட்டியாணம் வரை மட்டுமே தங்கத்தால் அணிய வேண்டும். இடுப்பிற்கு கீழே வெள்ளியினால் ஆன ஆபரணங்களையே அணிய வேண்டும். தங்கத்தில் அணியக் கூடாது. காற்சிலம்பு அல்லது தண்டை ஆக இருந்தாலும், கொலுசு ஆக இருந்தாலும், அது வெள்ளியில்தான் அணிய வேண்டும். பெண்கள் காலில் தங்கக் கொலுசு நிச்சயமாக அணியக் கூடாது. இறை மூர்த்தங்களுக்கு வேண்டுமானால் தங்கக் கொலுசு அணிவித்து அழகு பார்க்கலாம்.

?கோடை காலத்தில் கோயில்களில் கூழ், பானகம் போன்றவற்றை ஊற்றுவது ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.
இவைகள் அனைத்தும், வெயிலின் தாக்கத்தினால் உடலில் உண்டாகும் உஷ்ண பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கும் பானங்கள். மனிதனின் பசியைப் போக்கும் வகையில் அவனது வயிற்றுக்கு உணவிடும் அன்னதானம் என்பது எத்தனை புண்ணியம் தருமோ, அது போல பத்துமடங்கு பலனைத் தருவது இந்த தாகசாந்தி என்பது. அதாவது தாகத்தினால் நாவறண்டு போகாமல் காக்கும் தாகசாந்தி, அன்னதானத்தைவிட உயர்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் பெருமளவில் கூடும் ஆலயங்களில் கோடை காலத்தில் இதுபோன்ற கூழ் மற்றும் பானகம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், அவர்களின் உடல் வெப்ப வறட்சியில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள் அனைத்துமே மனிதனின் உடல்நலம் காக்கத்தான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

?தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?
– ஜெ. மணிகண்டன், வேலூர்.
இந்த சம்பிரதாயத்திற்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தை அளித்தாலும், சாஸ்திரம் அறிந்த பெரியவர்கள் சொல்வது இதுதான். நாம் எந்த ஒரு பூஜையைச் செய்தாலும் அதில் மனோவாக்காய என்ற வார்த்தை சங்கல்பத்தில் பயன்படுத்தப்படும். அதாவது, மனம், வாக்கு, காயம் (உடல்) இந்த மூன்றும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் முக்கியப் பண்பாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குடும்பப் பொறுப்பினை சுமக்க உள்ள அந்தப் பெண்ணிற்கு இந்த கருத்தானது மூன்று முடிச்சு மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதாவது நீ எப்பொழுதும் மனதில் நற்சிந்தனைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பது முதலாவது முடிச்சு. அப்படி மனதில் நினைத்ததை மட்டுமே உன்னுடைய வாக்கினில் அதாவது வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் பிரதிபலிக்க வேண்டும் என்பது இரண்டாவது முடிச்சு. நீ வெளிப்படுத்திய வார்த்தைகளின் படியே எப்பொழுதும் உடலாலும் செயல்பட வேண்டும் என்பதே மூன்றாவது முடிச்சு. இப்படி சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வதே இந்த மூன்று முடிச்சு போடுவதற்கான தாத்பர்யம்.

?கோயில்களில் உடைத்த தேங்காயினை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா? அப்படி எடுத்துச் சென்ற தேங்காயை சமையல் செய்து சாப்பிடலாமா?
– மனோ, சென்னை.
திருஷ்டிக்காக உடைக்கப்பட்ட காய்களைத்தான் எடுத்துச் செல்லக் கூடாது. மற்றபடி சுவாமிக்கு அர்ச்சனை செய்து உடைக்கப்பட்ட தேங்காய்களை தாராளமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று சமையல் செய்து சாப்பிடலாம் என்று சொல்வதைவிட, கண்டிப்பாக அந்த தேங்காய்களை சாப்பிட வேண்டும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

Tags : T. Murugesan ,Gangalancherry ,
× RELATED உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம்