திருமலை: தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி காவல் ஆணையராக பணிபுரிபவர் சுமதி, ஐபிஎஸ். இவர் பெண்களை கேலி, கிண்டல் செய்யும் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி கடந்த 5ம்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ஐதராபாத் தில்சுக் நகர் பஸ் நிலையத்தில் சாதாரண உடையில் பஸ்சுக்கு காத்திருப்பது போல் தனியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருப்பதை அவ்வழியாக வந்த சில வாலிபர்கள் பார்த்து அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். அடுத்தடுத்து அவ்வழியாக வந்த சிலர், அவர் ஐபிஎஸ் அதிகாரி என தெரியாமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து தப்பிப்பது போல் சென்றபோது அவரை பைக்கில் துரத்தியுள்ளனர்.
இதையெல்லாமல் நேரிலேயே கண்டபிறகும் மனம் தளராமல் அதிகாலை சுமார் 3.30 மணி வரை அப்பகுதியிலேயே தொடர்ந்து அங்கேயே ஒவ்வொருவரின் நடத்தையையும் கவனித்துக்கொண்டிருந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். போலீசார் விரைந்து வந்து ஐபிஎஸ் அதிகாரியை கேலி, கிண்டல் செய்த 40 பேரை சுற்றி வளைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 40 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சுமதி கூறுகையில், ‘ஒரு ஐபிஎஸ் அதிகாரியே இவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருக்கும்?. பெண்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டால், பயப்படாமல் குரல் கொடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்காக ஷீ டீம்ஸ் மற்றும் 100 போன்ற சேவைகள் உள்ளன. ஆபத்து ஏற்படும்போது பெண்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த சோதனை தொடரும். இவ்வாறு கேலி, கிண்டல் செய்பவர்களை தொடர்ந்து கைது செய்வோம்’ என்றார்.
