×

சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா; காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ‘சோம்நாத் கோயில் காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு’ என புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயிலின் 75ம் ஆண்டு நிறைவு கொண்டாடத்தில் பங்கேற்க வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். குஜராத்தின் பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 1951ம் ஆண்டு மே 11ம் தேதி திறக்கப்பட்டது. இதன் 75ம் ஆண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் சோம்நாத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, வரும் 11ம் தேதி நடக்க 75ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, சோமநாதர் ஆலய அறக்கட்டளை தலைவரான பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சோமநாதர் ஆலயத்தின் மீதான முதலாவது தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகளை நினைவுகூரும் சோமநாதர் சுயமரியாதை விழாவிற்காக கடந்த ஜனவரியில் சோம்நாத் சென்றிருந்தேன். தற்போது, புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயில் திறந்து வைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11 அன்று மீண்டும் சோம்நாத் செல்கிறேன்.

கடந்த 1951ம் ஆண்டு மே 11ம் தேதி புனரமைக்கப்பட்ட சோம்நாத் கோயிலை திறந்து வைத்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிகழ்த்திய உரையில், ஈடு இணையற்ற நம்பிக்கையும் அன்பும் கொண்ட எதையும் அழிக்க முடியாது என்பதை சோமநாதர் ஆலயம் உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று கூறினார். மேலும், கோயிலின் புனரமைப்பு சர்தார் படேலின் கனவை நனவாக்கியதாகும் என்றும், அந்த உணர்வை முன்னோக்கிக் கொண்டுசென்று, மக்களின் வாழ்வில் வளத்தை மீட்டெடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

பத்தாண்டுக்கும் மேலாக நாங்கள் பயணித்து வரும் பாதை இதுதான். ‘வளர்ச்சியும், பாரம்பரியமும்’ என்ற தத்துவத்தால் உத்வேகம் பெற்று, சோம்நாத் முதல் காசி வரை, காமாக்யா முதல் கேதார்நாத் வரை, அயோத்தி முதல் உஜ்ஜயினி வரை, த்ரிம்பகேஷ்வர் முதல் ஸ்ரீசைலம் வரை, நமது ஆன்மீக மையங்களின் பாரம்பரியத் தன்மையைப் பாதுகாத்துக்கொண்டே, அவற்றை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் வாய்ப்பு எங்கள் அணிக்குக் கிடைத்ததை நான் எனது நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.

இந்தச் சிறப்புமிக்க தருணத்தில் சோம்நாத்துக்குப் பயணம் செய்யுமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சோம்நாத்தின் கடற்கரையில் நிற்கும்போது, பக்தியால் பேரானந்தம் அடைவது மட்டுமின்றி, பாரதத்தின் வெல்ல முடியாத உணர்வை அனுபவிப்பீர்கள். அது நிச்சயம் மறக்க முடியாததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Somnath Temple ,PM Modi ,New Delhi ,Modi ,Gujarat ,Somnath Temple… ,
× RELATED 10,000+ கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம்...