பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்

 

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு அனுமதி பெற்று வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதால் முடிவுகள் 8ம் தேதி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் பள்ளி மாணவ மாணவியர் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும், தனித் தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதினர்.

அதன் தொடர்ச்சியாக, பிளஸ்2 வகுப்பு தேர்வுகளுக்காக தமிழகம், புதுச்சேரியில் 3412 தேர்வு மையங்களும், அமைக்கப்பட்டன. இதையடுத்து, மார்ச் மாதம் இறுதியில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. மே மாதம் 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. முன்னதாக ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளுடன் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்தன.

இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவை ேதர்தல் நடந்ததை அடுத்து, தேர்தலுக்கு பிறகு ஏற்கெனவே அறிவித்தபடி மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய அரசு பதவி ஏற்க இருக்கிறது. அதற்கு அரசு அனுமதி பெற்றபிறகு தேர்வு முடிவுகளை வெளிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: