×

கேரளாவில் புதிய முதல்வர் யார்?.. சதீசன், ரமேஷ் சென்னித்தலா, கே.சி.வி. இடையே கடும் போட்டி

 

திருவனந்தபுரம்: கேரளாவில் 102 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி சாதனை படைத்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், கே.சி வேணுகோபால் எம்.பி. ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் 10 வருட இடைவெளிக்குப் பின்னர் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் இந்தக் கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணிக்கு இம்முறை வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பாஜ கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று தேர்தலுக்கு முன்பே கூறப்பட்டது. மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னித்தலா, கே. சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், கே.சி. வேணுகோபால், எம்.பி. ஆகியோர் முதல்வர் பதவி மீது குறி வைத்துள்ளனர். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு வேணுகோபால் மிக நெருக்கம் என்பதால் அதை பயன்படுத்தி முதல்வர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டு வருகிறார். ஆனால் சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் முதல்வர் நாற்காலியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இதற்காக இருவரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர்.

பொதுவாக காங்கிரஸ் கட்சியில் முதல்வர்களை கட்சியின் மேலிடம் தான் தீர்மானிக்கும். டெல்லியில் இருந்து காங்கிரஸ் மேலிடக் குழுவைச் சேர்ந்த 2 பேர் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று எம்எல்ஏக்களுடன் கலந்து பேசி தீர்மானம் எடுப்பார்கள். இதன் பிறகு முடிவெடுக்கும் பொறுப்பு மாநில தலைவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த நடைமுறைகளுக்குப் பின்னரே முதல்வர் யார்? என்பது குறித்து அறிவிக்கப்படும். இதே நடைமுறைதான் கேரளாவிலும் பின்பற்றப்படும். முதல்வர் ரேசில் உள்ள 3 பேருக்கும் பலமும், பலவீனங்களும் உள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தோல்வியடைந்த நிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவராக சதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் 5 ஆண்டுகள் ரமேஷ் சென்னித்தலா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். சதீசன் எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு நடந்த 5 இடைத்தேர்தல்களில் நான்கில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 18ல் வெற்றி பெற்றது. இதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இவை அனைத்தும் சதீசனுக்கு பலமாக உள்ள போதிலும் சமுதாய தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவது, தலைக்கனம் பிடித்தவர் என்ற பேச்சு அடிபடுவது ஆகியவை இவருக்கு பலவீனமாக உள்ளது. ரமேஷ் சென்னித்தலா 26 வயதில் எம்எல்ஏ ஆகி, 30 வயதில் அமைச்சர் ஆனவர். கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்த இவர், நீண்ட காலம் எம்பியாகவும் பணியாற்றினார். ரமேஷ் சென்னித்தலாவுடன் நெருக்கமான பல தேசிய காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர்கள் ஆகிவிட்டனர்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் இவர் மூத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியை உடைத்து கருணாகரன் புதிய கட்சியை தொடங்கிய போது மாநில தலைவராக பொறுப்பேற்று கட்சியை திறம்பட நடத்தியவர் என்ற பெயர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு உண்டு. ஆனால் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இது இவருக்கு ஒரு பலவீனமாக உள்ளது. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கு, மது பார் ஊழல் வழக்கு ஆகியவை அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

முதல்வர் ரேசில் அடுத்த இடத்தில் உள்ள கே.சி. வேணுகோபால், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். இது இவருக்கு ஒரு பலமாக உள்ள போதிலும் தற்போது எம்பியாக உள்ள யாருக்கும் தேர்தலில் சீட் கொடுக்காத நிலையில் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் அது காங்கிரஸ் கட்சியில் கடும் பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Tags : Chief Minister ,Kerala ,Satheesan ,Ramesh Chennithala ,K.C.V. ,Thiruvananthapuram ,Congress ,K.C. Venugopal ,
× RELATED ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எல்பிஜி தேவையில் 16% சரிவு…