திருவனந்தபுரம்: கேரளத்தில் 102 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. பாஜ முதன்முதலாக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
முதல்வர் பினராயி விஜயன் கடந்த இரண்டு முறை வெற்றி பெற்ற கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் கடந்த முறை வெற்றி பெற்ற பரவூர் தொகுதியிலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னித்தலா ஹரிப்பாட்டிலும், மாநில தலைவர் சன்னி ஜோசப் பேராவூரிலும், முரளீதரன் வட்டியூர்க்காவிலும், பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்து சுமார் 1 மாதத்திற்குப் பின்னர் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தன.
ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும்போது தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த தேர்தலில் இந்தக் கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
கேரள வரலாற்றில் இடதுசாரி கூட்டணிக்கு தற்போது தான் மிகவும் குறைவான தொகுதிகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாஜ கூட்டணி நேமம், கழக்கூட்டம் மற்றும் சாத்தனூர் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* யார் முதல்வர்? காங்கிரசில் முட்டி மோதும் தலைவர்கள்
காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கு கடும் மோதல் இருக்கும் என்று தேர்தலுக்கு முன்பே கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே இக்கட்சியில் மோதல் தொடங்கியது. குறிப்பாக மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னித்தலா, எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், எம்பிக்களான சுதாகரன் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோருக்கு இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்குப் பிறகு இவர்களுக்காக பல பகுதிகளில் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்தனர்.
ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் சிலருடைய பெயரை வெளிப்படையாகவே அறிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சதீசனின் பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது. ஆனால் கே.சி. வேணுகோபால், எம்பி மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகிய இருவரும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. காங்கிரஸ் மேலிடம்தான் முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் என்று இவர்கள் கூறி வருகின்ற போதிலும் 3 பேரும் முதல்வர் பதவியை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.
* முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா
தேர்தலில் இடதுசாரி கூட்டணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவோடு இரவாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கருக்கு அனுப்பி வைத்தார். அவருடைய ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
* பாதுகாப்பு அறையின் பூட்டு உடைப்பு
எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 7 மணியளவில் பாதுகாப்பு அறையை திறக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் சாவி காணாமல் போனது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் தேடியும் சாவி கிடைக்கவில்லை. இதையடுத்து பூட்டை உடைக்க தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பூட்டை உடைத்து பாதுகாப்பு அறையை திறந்தனர். இதன்பிறகு சுமார் 40 நிமிடங்கள் கழித்தே இங்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
* தோல்வியை தழுவிய 12 அமைச்சர்கள்
கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்பட 19 அமைச்சர்கள் போட்டியிட்டனர். இவர்களில் சிவன்குட்டி, ராஜீவ், ராஜேஷ், வீணா ஜார்ஜ், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன், வாசவன், பிந்து, ரோஷி அகஸ்டின், சிஞ்சு ராணி, சசீந்திரன், அப்து ரகுமான், கணேஷ்குமார் ஆகிய 12 பேர் தோல்வியை தழுவினர். பினராயி விஜயன், முகம்மது ரியாஸ், பாலகோபால், சஜி செரியான், பிரசாத், அனில் மற்றும் ராஜன் ஆகிய 6 பேர் மட்டுமே இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
* நடிகர் ரமேஷ் பிஷாரடி வெற்றி
கேரளத்தில் இந்த தேர்தலில் 3 மலையாள நடிகர்கள் போட்டியிட்டனர். பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞரும், டைரக்டருமான ரமேஷ் பிஷாரடியும், பத்தனாபுரம் தொகுதியில் நடிகரும், அமைச்சருமான கணேஷ்குமாரும், திருவனந்தபுரம் தொகுதியில் நடிகர் சுதீர் கரமனாவும் போட்டியிட்டனர். இதில் ரமேஷ் பிஷாரடி மட்டுமே வெற்றி பெற்றார். இவர் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் ஷோபா சுரேந்திரனை தோற்கடித்தார்.
* கேரள மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி
புதுடெல்லி: கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்த மக்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “கேரளாவில் உள்ள என் சகோதார, சகோதரிகளே, தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றி.
கடுமையாக போராடி, சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்கள். நன்றிகள். கேரளத்தில் திறமையும், ஆற்றலும் உள்ளது. தற்போது இந்த இரண்டையும் பயன்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
* 6 சுற்றுக்களில் பின்தங்கிய பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக தேர்தலை சந்தித்தார். இந்தத் தொகுதி சிபிஎம்மின் கோட்டையாக கருதப்படுகிறது. நேற்று முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது பினராயி விஜயன் முன்னிலையில் இருந்தார். ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும்போது முதல் சுற்றிலேயே பினராயி விஜயன் பின்தங்கினார். 6 சுற்றுக்கள் வரை அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ரஷீதை விட இவர் பின்தங்கியே இருந்தார்.
பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தங்களது முதல்வர் வெற்றி பெறுவார் என நம்பியிருந்த இடது முன்னணி தொண்டர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் 7வது சுற்றில் இருந்து இவர் முன்னிலை பெறத் தொடங்கினார். இறுதியில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பினராயி விஜயன் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் பினராயி விஜயன் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தத் தேர்தலில் இவருக்கு 59.61 சதவீத வாக்குகள் கிடைத்தன.
* 3 தொகுதிகளில் பாஜ வெற்றி
கேரளத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் நேமம், பாலக்காடு, காசர்கோடு, கழக்கூட்டம் உள்பட 6 தொகுதிகளில் பாஜ முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசியில் 3 தொகுதிகளில் இக்கட்சி வெற்றி பெற்றது. நேமம் தொகுதியில் பாஜ மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரும், கொல்லம் மாவட்டம் சாத்தனூர் தொகுதியில் கோபகுமாரும், கழக்கூட்டம் தொகுதியில் முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் வி. முரளீதரனும் வெற்றி பெற்றனர். ராஜீவ் சந்திரசேகர் 4978 வாக்குகள் வித்தியாசத்திலும், கோபகுமார் 4002 வாக்குகள் வித்தியாசத்திலும், முரளீதரன் 478 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
