×

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எல்பிஜி தேவையில் 16% சரிவு…

டெல்லி: எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள உலகளாவிய இடையூறுகளுக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எல்பிஜி தேவை 16% சரிந்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி விநியோக தடங்கல்கள் காரணமாக, நாட்டில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் (LPG) உள்நாட்டு நுகர்வு ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்து, 2.2 மில்லியன் டன்களாக வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவால் (PPAC) சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு LPG நுகர்வு, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் (ஆண்டுக்கு-ஆண்டு அடிப்படையில்) 16.16 சதவீதம் குறைந்துள்ளது.அதாவது, 2025 ஏப்ரல் மாதத்தில் 2.62 மில்லியன் டன்களாக இருந்த LPG நுகர்வு, தற்போது 2.2 மில்லியன் டன்களாக சரிந்துள்ளது.

மாதத்திற்கு -மாதம் என்ற அடிப்படையிலும் LPG நுகர்வில் சரிவு பதிவாகியுள்ளது. கடந்த மார்ச்சில் உள்நாட்டு LPG நுகர்வு 2.379 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது எல்பிஜி தேவைகளுக்காக இறக்குமதியை தொடர்ந்து பெருமளவில் சார்ந்துள்ளது, இதில் கிட்டத்தட்ட 60 சதவீத விநியோகம் சர்வதேச சந்தைகளில் இருந்து பெறப்படுகிறது. இதில் கணிசமான அளவு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது.

ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த வழித்தடத்தின் மூலம் கிடைக்கும் விநியோகம் இயல்பாக இல்லை. குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (யுஏஇ) வரும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. எனவே உள்நாட்டு சமையல் எரிவாயு இருப்பை உறுதி செய்ய, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற வணிக நுகர்வோருக்கான விநியோகத்தை அரசு குறைத்துள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர்களை புக் செய்வதற்கான இடைவெளி நாட்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதே போல சமீபத்திய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் விமான டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) நுகர்வு 1.37 சதவீதம் குறைந்து, 761,000 டன்களானது. இது வான்வெளி மூடல்கள் மற்றும் விமானச் செயல்பாடுகள் குறைக்கப்பட்டதன் தாக்கத்தைப் பிரதிபலித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Delhi ,West Asia ,
× RELATED டெல்லியில் நீட் தேர்வு மோசடி:...