கவுகாத்தி: அசாமில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜ கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வர் ஹிமந்தா ஜலுக்பாரிதொகுதியில் வெற்றி பெற்றார். அசாமில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்ட பேரவைக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இதில், தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 40 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்,வாக்குகள் எண்ண தொடங்கியதில் இருந்தே பாஜ முன்னிலை வகித்தது. இதில் பாஜ கட்சி 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான அசாம் கண பரிஷத் 10 இடங்களிலும்,போடோலாந்து மக்கள் முன்னணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் 19 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சி ராய்ஜோர் தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி(ஏஐயுடிஎப்) இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.ஏஐடிசி கட்சி ஒரு கட்சியில் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா,ஜலுக்பாரி தொகுதியில் 6வது முறையாக வெற்றி பெற்றார். மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்ஹாட் தொகுதியில் தோல்வியை தழுவினார். அசாம் மாநில அமைச்சர் ஏஜிபி கட்சி தலைவர் அதுல் போரா போக்காஹாட் தொகுதியில் வெற்றி பெற்றார்.
மாநில நிதி அமைச்சர் அஜந்தா நியோக் கோலாஹாட் தொகுதியில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றார். பினாகண்டி தொகுதியில் போட்டியிட்ட அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல் ஏஜேபி வேட்பாளரை விட அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆளும் பாஜ கட்சி பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 3 வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
* ஜோர்ஹாட்டில் கோகாய் தோல்வி
அசாம் சட்டமன்ற தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் தோல்வி அடைந்தார். அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பாஜ வேட்பாளர் ஹித்தேந்திரநாத் கோஸ்வாமியிடம் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஹிதேந்திர நாத் ஏற்கனவே இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார். கவுரவ் கோகாய் மக்களவையில் காங்கிரஸ் துணை தலைவராக உள்ளார். அவர் முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியுற்றார்.
