×

ஜனப்பன் சத்திரம் – ஊத்துக்கோட்டை வரை புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆறே மாதத்தில் சேதம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை புதிதாக போடப்பட்ட 6 மாதத்திலேயே சேதமான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தார்ச்சாலை போடப்பட்டது. இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சுருட்டபள்ளி, நாகலாபுரம், பிச்சாட்டூர், புத்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும் இதே போல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார், பேருந்து, வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலை பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. ஆனால் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்றதால் 5 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம் பெரியபாளையம், கன்னிகைப்பேர், ஜெயபுரம், வடமதுரை கூட்டு சாலை, மஞ்சங்காரணை என ஆங்காங்கே சேதம் அடைந்து பெரிய அளவில் மரண பள்ளங்கள் ஏற்பட்டது.

மேலும், பல இடங்களில் சாலை விரிசல் ஏற்பட்டு பெயர்ந்தது, இதனால் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் பள்ளத்தில் கீழே விழுந்து காயம் அடைந்தனர். எனவே, தரமான புதிய சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த வருடம் டிசம்பர் மாதமும், ஜனவரி மாதமும் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளங்களில் பிப்ரவரி மாதம் தற்காலிகமாக பேட்ஜ் ஒர்க் பணிகள் செய்தனர். இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். விரைவில் சாலை போட்டால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை ரூ.32 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் சாலை பணிகள் முடிவடைந்தது.

இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், புதிதாக போடப்பட்ட சாலை பெரியபாளையம் அருகே பனப்பாக்கம், ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் சாலை போடப்பட்ட 6 மாதத்திலேயே சேதமடைந்து விட்டது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை கடந்த வருடம் ரூ.32 கோடி மதிப்பீட்டில் சாலை போடப்பட்டது. இந்த சாலை ஜெயபுரம் மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், நாங்கள் இரவில் இந்த வழியாக பைக்கில் செல்லும் போது கீழே விழுந்து காயம் அடைகின்றோம். எனவே, விரைவில் இந்த பகுதியில் சேதமடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Janappan Chatram ,Uthukkottai ,Chennai-Tirupathi National Highway ,Periyapalayam… ,
× RELATED முத்துப்பேட்டை அடுத்த இடும்பவனத்தில்...