- எனாம்
- புதுச்சேரி
- புதுச்சேரி யூனியன் பிரதேசம்
- கோதாவரி நதி
- காக்கிநாடா, ஆந்திரா
- ஆந்திரா
- காக்கிநாடா
- கிழக்கு கோதாவரி
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியமானது ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவைவிட ஏனாமில் பெட்ரோல், டீசல் ரூ.12 முதல் ரூ.14 வரை குறைவு என்பதால் ஆந்திராவின் காக்கிநாடா, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள், விவசாயிகள் ஏனாமில்தான் பெட்ரோல், டீசல் வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது அங்கு பயிர் அறுவடை காலம் என்பதால் ஆந்திராவின் பல பங்க்குகளில் பெட்ரோல், டீசல் உடனடியாக தீர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆந்திராவின் காக்கி நாடா, கிழக்கு கோதாவரி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த அம்மாநில விவசாயிகள், வாகன ஓட்டிகள் பல கிமீ தூரம் கடந்து ஏனாம் பங்க்குகளுக்கு கடந்த சில நாட்களாக படையெடுத்து வருகின்றனர்.
இதனால் கேன் மற்றும் பேரல்களுடன் கூட்டம் அலைமோத, உள்ளூர்வாசிகளோ அத்தியாவசிய தேவைக்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கு மொத்தம் 15 பங்க்குகளில் 7 பங்குகளே செயல்பட்டதால் ஏனாம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக ஏனாம் பிராந்திய நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து மண்டல நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளூர் மக்களுக்கு பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளது. அதன்படி, உள்ளூர் மக்களுக்கு காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் சிரமமின்றி பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர். அதேநேரம், ஆந்திராவை சேர்ந்த விவசாயிகள், வாகன ஓட்டிகளால் பங்க்குகளில் தொடர்ந்து கூட்டம் அலைமோதி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த பங்குகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
