பல்லாவரம்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குஷ்னாமா (18) என்ற பெண். இவர், கடந்த 3 ஆண்டுகளாக பல்லாவரம் கன்டோன்மென்ட், பெரியபாளையத்தம்மன் கோவில் அருகே கம்பர் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணவன் மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளனர். இவரது கணவர், சென்னை வேளச்சேரியில் ஒரு தனியார் ஷாப்பிங் மாலில் ஏசி மெக்கானிக்காக வேலைபார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள வீடுகளில் குஷ்னாமா வீட்டுவேலைகளை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழ முயற்சித்தனர். இதேபோல், நேற்று காலை மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமான குஷ்னாமா சாப்பிடாமல் இருந்துள்ளார். பதிலுக்கு, அவரது கணவரும் சாப்பிடாமல் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு ஆளான வடமாநிலப் பெண் குஷ்னாமா, தனது 6 மாத பெண் குழந்தை அனாதையாகி விடுமே என கவலைப்படாமல், படுக்கையறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே வடமாநில பெண் குஷ்னாமா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லாவரம் போலீசார் விரைந்து சென்று, குஷ்னாமாவின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத் தகராறு குறித்து குஷ்னாமாவின் கணவர் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
