சென்னை: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 முதல் 2023ம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அறப்போர் இயக்கத்தின் தரப்பில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அதிமுக நிர்வாகி சரவணன் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார்களை முடித்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்திருந்திருக்கலாம். அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் வழங்கி இருக்கிறது. அமைச்சர், மின் வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
டான்ஜெட்கோ தரப்பில், 2021-2023ம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறு. அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை என்று வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லாததால், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை 2 வாரங்களில் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்பு துறை, டான்ஜெட்கோ ஆகியோர் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்கு தானே தவிர, குற்றச்சாட்டுக்களின் தகுதி குறித்த முடிவாக கருதமுடியாது. இந்த கருத்துக்கள் யாருக்கும் எதிரானவையாக கருத முடியாது என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
