193. துஷ்ட தூரா, 194. துராசார சமநீ, 195. தோஷ வர்ஜிதா, 196. ஸர்வஜ்ஞா, 197. ஸாந்த்ரகருணா, 198. ஸமாநாதிக வர்ஜிதா.
இதில் வரும் மூன்று நாமங்கள் அநிஷ்ட நிவர்த்தி (தீமையை விலக்குதல்) என்றும், இதற்கு அடுத்து வரும் மூன்று நாமங்களை இஷ்டப் பிராப்தி (நன்மையை கொடுத்தல்) என்றும் சம்பிரதாயத்தில் சொல்வார்கள். அதாவது, முதல் மூன்று நாமங்கள் தீமையை விலக்குதல். அடுத்த மூன்று நாமங்கள் நன்மையை கொடுத்தல். ஏனெனில், இதற்கு முந்தைய நாமங்களான துக்க ஹந்த்ரீ, சுகப்ரதா என்கிற இரண்டு நாமங்களும் அப்படித்தான் அமைந்திருக்கும். துக்கத்தை நீக்கி சுகத்தை தருபவள் என்பதுதான் அம்பாளினுடைய முக்கியமான விஷயமாகும்.
துக்க ஹ்ந்த்ரீ என்கிற அநிஷ்ட நிவர்த்தியையே முதல் மூன்று நாமங்களின் விளக்கமாக பார்க்கப் போகிறோம்.
சுகப்ரதா என்கிற இஷ்ட பிராப்தியையே இரண்டாவது பகுதியிலுள்ள மூன்று நாமங்களின் வழியேயும் பார்க்கப் போகிறோம்.
இதில் இருக்கக் கூடிய நாமங்களெல்லாம் வெளிப்படையான பொருள் உடையதுதான். அதேசமயம் அதற்குள் உள்ளார்ந்த தத்துவமும் உள்ளது.
துஷ்ட தூரா என்பது முதல் நாமா. எதையெல்லாம் நாம் துஷ்டம் என்று நினைக்கிறோமோ அதெல்லாம் அம்பாளினுடைய சாந்நித்தியத்தினாலேயே தூர விலகிப் போய்விடும். பொதுவாக துஷ்டன் என்பதை எதிரியைத்தான் னைப்போம். அதுவும் உண்டு. நம்மை எதிர்ப்பவர்கள். தர்மத்திற்கு எதிராக இருக்கக் கூடிய அதர்மத்தை கைக் கொள்பவர்கள். தீமை செய்பவர்களெல்லாம் துஷ்டர்களே. இயற்கையாலோ அல்லது விலங்குகளினாலோ என்றெல்லாம் நடக்கக் கூடிய தீமை இருக்கிறது. இதேபோல் internal ஆக, நமக்குள்ளும் தீமை செய்யக்கூடிய துஷ்டம் இருக்கிறது. இதைத்தான் ஆசை, கோபம், மத மாச்சார்யம் என்றெல்லாம் சாஸ்திரங்கள் பட்டியலிடுகின்றன. இதற்குப் பிறகு நம்மிடம் இருக்கக்கூடிய அஞ்ஞானம், அகங்காரம், அகந்தை, நம்பிக்கையின்மை இப்படி எல்லாமே நம்மிடம் உள்ளன. ஆனால், இவை அனைத்துமே அம்பாள் என்கிற சாந்நித்தியத்தின் முன்னால் இவை அனைத்தும் விலகிவிடும். அதனால், துஷ்ட தூரா என்கிற நாமத்தினால் வர்ணிக்கப்படுகிறாள்.
துராசார சமநீ முதல் நாமாவான தூரா என்பது வெளி விஷயங்களினாலோ அல்லது நம்மிடம் உள்ள துஷ்டத்தினால் வருவது என்று பார்த்தோம். ஆனால், இந்த தீமையானது நம்முடைய ஆசாரத்தில் , செய்கைகளில்… எண்ணத்தில்… சொல்லில் பிரதிபலித்து விட்டால் அதற்கு துராசாரம் என்று பெயர் அப்படி பிரதிபலிக்காதது வரைக்கும் பிரச்னை இல்லை.
எல்லோருக்கும் நல்லெண்ணமும் வரலாம். கெட்ட எண்ணமும் வரலாம். Passing cloud போல் மனதில் வருகின்ற எண்ண விருத்திகள் உற்பத்தி ஆகி போய்க் கொண்டே இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், அது நம்முடைய ல்லையும், செயலையும், மனதையும் பாதிக்க ஆரம்பித்து விட்டால், அது பழக்கமாகிவிடும். Habit ஆகிவிடும். தீமை (bad) வெளியே இருந்தால் பிரச்னையில்லை. நமக்குள் வந்து அமர்ந்து (habitual bad) பழக்கமாகி விட்டால் பிரச்னைதான். இந்த துராசாரத்தை அழிப்பவள். தன்னுடைய பக்தர்களுக்கு யாராவது துராசாரமாக இருந்தால் அதையும் அழித்து விடுவாள். அதனால், துராசார சமநீ.
தோஷ வர்ஜிதா – இப்படி துராசாரத்தை அழிப்பதற்கு என்ன காரணமென்று பார்க்க வேண்டும். Bad habit என்று சொல்லக்கூடிய துராசாரத்தை வளர விட்டுவிட்டால், அது வளர்ந்து வளர்ந்து தோஷமாக மாறிவிடும். நாம் ஏதோ ஜாதகத்தில் இருப்பதையே தோஷம் என்று நினைக்கிறோம். ஆனால், நம்மிடமுள்ள ஒவ்வொரு defect ம் ஒவ்வொரு தோஷம்தான்.
நம்மிடமுள்ள முக்கியமான defect என்ன தெரியுமா?
இந்த மனசையும், இந்த உடம்பையும் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த defect எங்கிருந்து வந்தது?
அஞ்ஞானத்திலிருந்து வந்தது. அப்போது இந்த ignorance என்பதே மிகப் பெரிய defect. இப்போது இந்த ignorance என்கிற அறியாமை எதிலிருந்து வருகிறது?
நம்முடைய கர்ம வாசனையிலிருந்து வருகின்றது.
இப்போது இந்த கர்மா எப்படி வருகின்றது?
நான் தான் கர்த்தா… I am the doer என்று நினைப்பதே மிகப் பெரிய பிழை.
இந்த மூல அஞ்ஞானத்தினால் துராசாரங்கள் என்கிற bad habits உண்டாகிறது. அதர்மத்தை கைக்கொள்வது எல்லாமே bad habitsதான்.
இந்த மனசாட்சிக்கு தெரியும் எது தர்மம் என்று. ஏனெனில், மனசுக்கு சாட்சியாக இருக்கக் கூடியதே ஆத்மாவாகும். இந்த துராசாரத்திற்கு காரணம் தோஷங்கள் சூழ்ந்து கொள்ளும். அதனால், துஷ்டத்தனம் அதிகரிக்கும். இப்படித்தான் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கின்றன.
மேலே பார்த்த எல்லா தோஷத்தையும் நீக்குபவள். ஏன் நீக்குபவள் என்று சொல்கிறோமெனில், அவளுக்கு தோஷமே கிடையாது. அதனாலேயே அவளை தோஷ வர்ஜிதா என்று வர்ணிக்கிறார்கள். இப்படி மூல அஞ்ஞானத்தை பிடுங்கி எடுத்து விடுகின்றாள். அதனாலும் தோஷ வர்ஜிதா என்று வர்ணிக்கிறார்கள்.
இதற்கு அடுத்து வருகின்ற மூன்று நாமங்கள் அம்பிகை நமக்கு எப்படி நன்மையைத் தருகிறாள் என்று பார்க்கலாம்.
ஸர்வஜ்ஞா: அம்பிகை இவ்வளவு வல்லமைகளோடு இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்கிறாளே என்று சந்தேகம் வரலாம். என்ன பதில் எனில், நம்மிடம் இருக்கின்ற வரையறைகுட்பட்ட அறிவினால் எதுவுமே செய்ய முடியாது. இன்னும் கேட்டால் இந்த தோஷத்தை கண்டுபிடிக்கவே நம்மால் முடியாது. ஒருவேளை கண்டு பிடித்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதும் மிகவும் கஷ்டம். காரணத்தை கண்டுபிடித்தால் அதிலிருந்து எப்படி விலகுவது? அல்லது விலக்குவது என்பதும் தெரியாது. ஆனால், அம்பாளை பக்தியோடு வணங்கினால், அவள் நம்மிடமிருக்கும் தோஷங்களை எல்லாம் விலக்குவாள். ஏனெனில், அவள் எல்லாவற்றையும் அறிந்தவளாக இருக்கிறாள். அதனால், அவளுக்கு
சர்வக்ஞா என்று பெயர்.
ஸாந்த்ர கருணா: ஒருவருக்கு தினசரி எல்லாமுமே தெரிகிறது என்று வைத்துக் கொள்வோம். அதேசமயம் செல்வச் செழிப்போடும் இருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். இப்படி உயர்ந்த நிலையில் இருந்தால் சாதாரண மானிடருக்கு அவர்களையும் அறியாமல் கருணை குறைந்து விடும். எனக்குத்தான் எல்லாமே தெரியுமே என்று அவர்களையும் அறியாமல் அகங்காரம் வளர்ந்து விடும். ஆனால், இங்கு உண்மையிலேயே எல்லாமும் அறிந்தவளாக இருக்கிறாள். நாம் அம்பிகையின் முன்னால் நின்றால் நம்முடைய அத்தனை பிறவியினுடைய விஷயமும் அவளிடம் இருக்கிறது. நமக்கு ஒருவருடைய குறை தெரிகிறது என்றால், நமக்கு முன்னால் அவர் வந்தால் முதலில் நாம் அந்த குறையைத்தான் பார்ப்போம். அந்த குறையையும் குற்றத்தையும்தான் முதலில் சொல்வோம்.
நாமும் அம்பிகையின் முன்னால் சென்று நின்றால் நம்முடைய குறை அவளுக்குத் தெரியும். குழந்தை ஒன்று மண்ணிலும் சேற்றிலும் விளையாடிவிட்டு வந்தால் தாய் மென்மையாக கண்டிப்பாள். சேற்றைப் பூசிக் கொண்டு வந்து விட்டதாலேயே ஒதுக்கி வைக்க மாட்டாள். இதேபோல பிறவிதோறும் நம்முடைய அதர்ம காரியங்களைப் பார்த்து கோபப்படத்தானே வேண்டும். ஆனால், அவள் சாந்த்ர கருணாவாக இருக்கிறாள். எல்லையற்ற கருணையோடு இருக்கிறாள். இப்படி, எல்லாம் அறிந்தவளாக இருக்கும்போதே, எல்லையற்ற கருணையோடும் விளங்குகிறாள். அதேசமயம் நம்மிடமுள்ள தோஷங்களை நீக்குகிறாள். அவள் எப்படி சுத்தமாக இருக்கிறாளோ… அப்படியே நம்மையும்
சுத்தமாக்குகிறாள்.
ஸமாநாதிக வர்ஜிதா: இப்படியாக நாம் கேட்கிறோமோ… கேட்கவில்லையோ நம்மை சுத்தப்படுத்துகிறாள். அவள் எல்லாவற்றையும் அறிந்தவளாக இருந்தாலும் கூட, அந்த எல்லாம் அறிந்த தன்மையினால் நம்மை தண்டிக்காமல் , அவளின் எல்லையற்ற கருணையினால் நம்மை ஏற்றுக் கொள்கிறாள். இப்படி இருப்பதாலேயே அவளுக்கு சமானமானவர்கள் யாருமே இல்லை. அவளைத்தாண்டி இன்னொரு வஸ்து யாருமே இல்லை. நம்முடைய வாழ்வில் இரண்டு விஷயங்கள் கூட தெரிந்து கொண்டுவிட்டாலே போதும். ஆஹா… எல்லாமும் தெரிந்துவிட்டது என்று தோன்றும். ஆனால், அம்பிகையின் காருண்யத்தால் அவளுடைய நிலைக்கே நம்மை கொண்டு வருகிறாள். அதனால் அம்பிகைக்கு சமானமாக ஞானத்திலும், கருணையிலும் யாரேனும் உள்ளனரா என்றால் அதுவும் இல்லை. அதனாலேயே ஸமாநாதிக வர்ஜிதா. இது பிரம்மத்திற்கே உண்டான பிரத்யேக நாமமாகும். இங்கு அம்பிகை, ஆத்மா, பிரம்மம், சத்தியம் எல்லாமும் ஒன்றேயாகும்.
முதல் மூன்று நாமங்கள் அநிஷ்ட நிவர்த்தி என்கிற தீமையை போக்குவதாகவும், அடுத்த மூன்று நாமங்கள் இஷ்ட பிராப்தி என்பது நன்மையைக் கொடுப்பது என்று அமைந்திருக்கிறது. இது அவளைத்தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. எனவே, அவளுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. அதனால், ஸமாநாதிக வர்ஜிதா என்கிறது இந்த நாமம். ஸமாந + அதிக + வர்ஜிதா. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள்.
இந்த நாமங்களுண்டான கோயிலைப் பார்ப்போமா!
ஸமாநாதிக வர்ஜிதா என்கிற இந்த நாமா வந்திருப்பதால், ஒரு கோயிலிலுள்ள அம்பாளுக்கு இந்த நாமாவின் பெயரே அமைந்திருக்கிறது. திருச்சிக்கு அருகேயுள்ள திருநெடுங்களம் எனும் தலத்திலுள்ள அம்பிகையின் திருப்பெயர் ஒப்பிலா நாயகி என்பதாகும். சமஸ்கிருதத்தில் அதுல்யாம்பிகா என்று பெயர். சுவாமியின் திருப்பெயர் நித்ய சுந்தரேஸ்வரர் அல்லது நெடுங்களநாதர் என்று பெயர். அதுல்யா என்றால் ஒப்பில்லாதவள். ஒரு விஷயத்திற்கு சமானமாக ஒன்றைச் சொன்னால் துல்யம் என்று பெயர். அதுல்யா என்றால் சமானமாக ஒன்றைச் சொல்ல முடியாது என்று பொருள். அதனாலேயே அதுல்யாம்பிகை என்கிற ஒப்பிலா நாயகி என்று பெயர்.
(சுழலும்…)
