சாந்திதான் அந்த வீட்டின் மையம். ஆம், அவள் காலையில் எழுந்த பின்னர்தான் வீடே உயிர் பெறும்; காபியின் வாசனை, சமையலறையின் சத்தம், குழந்தைகளின் அவசரம் என அனைத்திலும் அவளது அன்பு கலந்து இருக்கும். அவள் இல்லையெனில் அந்த வீட்டின் ஓட்டமே மாறிப்போய்விடும் என்று வீட்டார் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், மாதவிலக்கு நாட்கள் வந்தால், அதே வீட்டில் அவளுக்கு ஒரு தூரம் வைக்கப்படும். அது யாருக்கும் புதிதில்லை; பல ஆண்டுகளாக வந்த ஒரு பழக்கம். “தீட்டுக் காலம்” என்று சொல்லி, அவள் தானாகவே ஒரு மூலையில் அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டிருந்தாள்.
அந்த நாட்களில் அவள் சமையலறைக்குச் செல்லமாட்டாள், வழக்கமாக அவள் தொடும் பொருட்களைத் தொட்டுக் கொள்ளமாட்டாள், வீட்டில் இருந்தாலும், அந்த வீட்டின் நடுவிலிருந்து அவள் சிறிது விலகி நிற்பாள். இது அவளுக்கு ஓய்வு என்ற பெயரில் கொடுக்கப்பட்ட இடைவெளி. ஆனால் அந்த ஓய்வின் உள்ளே ஒரு சொல்லப்படாத தனிமையும் வலியும் இருந்தது. அவள் அதை வெளியில் சொல்லவில்லை; அமைதியாகவே அதை தாங்கிக் கொண்டாள். வீட்டில் மற்றவர்கள் இதை வழக்கமாகவே எடுத்துக் கொண்டார்கள். யாருக்கும் கேள்வி எழவில்லை.
ஒரு மதிய நேரத்தில், வீட்டில் எல்லோரும் தங்கள் வேலையில் இருந்தபோது, திடீரென்று தாத்தா மயங்கி விழுந்தார். அந்த நொடியில் ஒரு குழப்பம் பரவியது. யாருக்கு என்ன செய்வது என்று புரியாமல் சில நொடிகள் உறைந்துபோனார்கள். அந்தச் சின்ன இடைவெளியில், சாந்தி மட்டும் தயங்கவில்லை. அவள் உடனே ஓடி வந்து தாத்தாவைத் தாங்கி தன் மடியில் படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்தாள். மருத்துவரை அழைக்கச் சொன்னாள். அவள் செய்த ஒவ்வொரு செயலும் அவசரமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. அந்த சில நிமிடங்களில் அந்த வீட்டின் துடிப்பே அவளாக மாறிவிட்டது.
அந்த தருணத்தில் யாரும் அவளைத் தடுக்கவில்லை; யாரும் “இது தீட்டுக் காலம்” என்று நினைக்கவில்லை. அவளது அன்பு, பொறுப்பு, மனிதம் என்பவைகள் தாத்தாவின் கண்களைத் திறக்கச்செய்தது; வீட்டில் இருந்த பதற்றம் மெதுவாக அடங்கியது. எல்லோரும் சுவாசம் விட்டார்கள். அந்த நிமிடத்தில், சொல்லாமல் ஒரு உண்மை எல்லோரின் உள்ளத்திலும் மெதுவாக எழுந்தது.
அனைத்தும் அமைதியான பிறகு, சாந்தி மீண்டும் தன் இடத்துக்குச் சென்றாள். அவள் முன்புபோல் எதுவும் நடக்காதது போல அமைதியாக உட்கார்ந்தாள். அவள் தன் மீது விதிக்கப்பட்ட அந்த தூரத்தை மீண்டும் ஏற்றுக் கொண்டாள். ஆனால், இந்த முறை, அந்த தூரம் இயல்பாகத் தோன்றவில்லை. அந்த வீட்டின் சுவர்களுக்குள் ஒரு மௌனம் உருவானது. அது பழக்கத்தின் மௌனம் இல்லை; அது சிந்திக்கச் செய்யும் மௌனம்.
அடுத்த மாதம் அதே நாட்கள் வந்தபோது, வீட்டில் யாரும் அவளை. “தொடாதே” என விலக்கவில்லை. “நீ ஓய்வு எடு” என்ற அன்பு மட்டும் இருந்தது; மாற்றம் பெரியதாகத் தோன்றவில்லை, ஆனால் அது ஒரு ஆழமான புரிதலின் ஆரம்பம். வார்த்தைகள் பேசப்படவில்லை, வாதங்கள் நடக்கவில்லை, ஆனால், ஒரு உண்மை உள்ளங்களில் பதிந்துவிட்டது. அன்பைத் தூரப்படுத்தும் எந்த பழக்கமும், அன்பின் முன் நிலைக்க முடியாது.
இறைமக்களே, மனிதனின் உடல்நிலையைவிட உயர்ந்தது அவன் உள்ளத்தின் நிலை. அன்பு செய்கிற கைகள் எப்போதும் தூயவையே; உயிரைக் காக்கும் இதயம் எந்தக் காலத்திலும் தீட்டாகாது. நாம் பழக்கமாக ஏற்றுக்கொண்ட சில விஷயங்கள், உண்மையில் மனிதத்துவத்தை மெதுவாக விலக்கிக் கொண்டிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.
பெண்மையின் இரத்தத்தை தீட்டு என்போமானால், அதே இரத்தத்திலிருந்து உயிராய் வந்த நாம் எப்படி “தூய்மை” என்று சொல்லப்படுவோம்? எனவே, தூரம் உருவாக்கும் மரபுகளை விட, அருகில் கொண்டு வரும் அன்பைத் தேர்ந்தெடுப்போம். மனிதனைப் பிரிக்கும் எண்ணங்களை விட, மனிதனை இணைக்கும் கருணையைப் பிடித்துக் கொள்வோம். ஏனெனில் இறைவன் பார்க்கிற தூய்மை உடலில் அல்ல; அன்பு நிறைந்த இதயத்தில்தான். அன்பு.. சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும்.
(1 கொரி.13:7) என இறைவேதம் நம் அன்பிற்கு அறைகூவல் தருகிறது.
– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.
