- இந்திரன்
- தேவேந்திரன்
- போதா
- இத்தாலம்
- மேதுபார மலை
- மயிலாடி பெருமால்புரா, கன்னியாகுமரி மாவட்டம்
- நாகர்கோவிலில்
பகுதி 2
மழைக் கடவுள் அருளும் மணமும் மக்கட்பேறும்
தேவேந்திரன் பொத்தை என்ற கோயிலில் பெண்கள் தொடர்பான வழிபாடுகள் நேர்ச்சைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தலம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்கு அருகில் மயிலாடி பெருமாள்புரத்தில் மருந்துவாழ் மலைக்கு பின்புறம் உள்ள ஒரு குன்றாகும். இங்கு இயற்கையான குகைப்பகுதியில் அமைந்த, அரிய இந்திரன் குகைக்கோவில் உள்ளது. சுமார் 360 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், இயற்கை எழில் கொஞ்சும், அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமைந்துள்ளது.
இந்திரனை வேண்டிக்கொண்டு குழந்தை வரம் கேட்டு வருவோர் அதிகம். அவர்கள் ஆண் குழந்தை பிறந்தால் இந்திரன் என்றும் பெண் குழந்தை பிறந்தால், தெய்வயானை என்றும் பெயர் சூட்டுகின்றனர். பூப்படையாத பெண்களும் கூட இந்திரனை வேண்டிக் கொள்வதால் பூப்படைவதாகவும் நம்பிக்கை காணப்படுகின்றது. இந்திரனுக்கு வலப்புறத்தில் காயத்ரி அம்மனுக்கு என்று ஒரு தனிச் சந்நதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திராணியும் கணவன் மற்றும் குழந்தை நலமும்
இந்திரனுக்கு என்று ஒரே ஒரு கோயில் இருப்பதை போன்று இந்திராணிக்கும் ஒரு கோயில் உண்டு. இக்கோயில் தாழமங்கை என்ற பெயரில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் உள்ளது. இக்கோயில் சப்த மங்கை ஸ்தலமாக விளங்குகிறது. மங்கை என்பது இந்திராணிக்கு உரிய பெயர்களில் ஒன்றாகும். இங்கு அவள் 18 கரங்களுடன் காட்சியளிக்கின்றாள். இறைவனின் பெயர் தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் ஆகும். நாகப்பட்டினம் அருகே தர்மபுரம் என்ற ஊரில் உள்ளது. நாகப்பட்டினம் அருகே இந்திரனையும் இந்திராணியையும் வழிபட அருகில் பௌத்தர்கள் நிறைய கோயில்களைக் கட்டினர். அவர்கள் காலத்துக்குப் பிறகு திருச்சி தஞ்சை மாவட்டங்களில் காணப்படும் இக்கோயில்களில் இறைவனின் பெயர்களில் இந்திரனின் பெயரும் இணைத்து (எ-டு) கண்ணாயிர நாதர் வழங்கப்படுகிறது.
இந்திரனுக்கும் உரிய மலை மகேந்திர மலை என்று கருதப்படுவதால் இந்திராணியை மகேந்திரா என்றும் இந்திரனை மகேந்திரன் என்றும் அழைக்கின்றனர். இவள் தேவலோகத்தின் அரசியாக கருதப்படுவதால் சாம்ராஜ்யதாயினி எனப்படுவாள். இந்திராணி நவரத்தின கிரீடமும் யானை வாகனம் கொண்டவள். இவளுக்கு சம்பங்கியும், மரிக்கொழுந்தும் வைத்து பூஜை செய்வது வழக்கம். இவளை வணங்குவோர் உயர் பதவி பெறுவர். மேலும் இந்திராணி பல ஆரோக்கியமான வலிமையான பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாய் என்பதால் இவளை வணங்குவோர் விரைவில் திருமணம் நடந்து நல்ல குழந்தைப் பேறு அடைவர். இத்தகைய நம்பிக்கையுடன் இந்திராணி வணங்கப்படுகிறாள். சப்த மங்கையரில் ஒருவராகவே இந்திராணி கருதப்படுகிறாள்.
ஆற்றங்கரையில் தோன்றிய குடும்ப அமைப்பு
மழையும், நதியும் மருத நிலத்தில் நதிக்கரை நாகரிகத்தையும் குடும்பம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. குடும்பம் என்பது ஆரோக்கியமான மனித வாழ்க்கைக்குரிய அடிப்படை அலகு ஆகும். பல குடும்பங்கள் இணையும்போது ஐயம் தோன்றுகிறது. குடும்பஸ்தன் தனக்கான உணவைத் தயாரிக்கும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவன் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்து சேமித்து வைக்கும் உணவு தானியத்தை தனக்கு உரிமை பட்டவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று கருதியதில் தவறொன்றுமில்லை. தன்னுடைய உழைப்பை அதனால் கிடைத்த பலனை தனக்குப் பிறகு ரத்த சொந்தங்கள், தனக்குப் பிறந்த பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையே குடும்பம் என்ற அமைப்பை தோற்றுவித்தது. இதற்கு அடிப்படையாக மூலகாரணமாக இருந்தது நிலம் மற்றும் வேளாண்மை ஆகும்.
தண்ணீரின் தெய்வீகம்
மக்கள் குடும்பம் குடும்பமாக நிரந்தரமாக நதிக்கரைகளில் தங்கி ஓரிடத்தில் நிலத்தை வேலியிட்டு வேளாண்மை செய்து அதன் பலனை அனுபவித்தனர். வீடு, தெரு, நகர், கோட்டை என்று பாதுகாப்பான ஊர் உருவாயிற்று. மருத நிலத்தவன் ஊரன் எனப்பட்டான். மருத நிலத்தில் மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் என்ற முந்நீரும் பாதுகாக்கப்பட்டது. குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால், தேக்கம், அணை ஆகியன மனிதர்களால் உருவாக்கப்பட்டன.
தண்ணீர் தெய்வமாக போற்றப்பட்டது. அதனை அசுத்தப்படுத்த கூடாது. தண்ணீரில் எச்சில் உமிழக் கூடாது. தண்ணீரை நோக்கியபடி சிறு நீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ கூடாது. தண்ணீரை வீணாக்க கூடாது. தண்ணீர் அபிஷேக பொருளாயிற்று, புனித நதிகள் என்று சில ஆற்றின் நீர் போற்றப்பட்டது. குடமுழுக்குக்கு பல ஆறுகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. துஷ்ட ஆவியால் தாக்கப்பட்டவர்கள், விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்கள் மந்திரம் சொல்லி ஓதி கொடுத்த அல்லது தலையில் தெளித்த தண்ணீரால் சுகம் பெற்றனர். கோயில்களில் துளசி, பச்சை கற்பூரம் சேர்க்கப்பட்டு புனித தீர்த்தம் ஆயிற்று. இவ்வாறு தண்ணீர் தெய்வத் தகுதி பெற்று வழிபடு பொருளாயிற்று.
மழை கடவுளின் செல்வாக்கு
கிரேக்கர்களின் ஜியூஸ் என்ற தேவர்களின் தலைவன் அல்லது முதன்மை கடவுள் இடி, மின்னலை வைத்து அதிகாரம் பெற்றவன். இவனே ஒலிம்பஸ் மலையிலுள்ள கடவுளர்களின் கடவுள் ஆவான். அதாவது தேவர்களின் தலைவனான தேவேந்திரனை நிகர்த்தவன். இவனுடைய அடையாளமாக இடி, மின்னல் உள்ளது. இது தவிர பருந்து, காளை மாடு, ஓக்மரம் ஆகியவையும் ஜீயசின் அடையாளங்களாகும். ஜீயசும் இந்திரனைப்போல் பல்வேறு பெண்களுடன் கூடி எத்தனா, ஹலோ, தர்மேஷ், ரெப்ளிஸ், மைனஸ், நியுசஸ், ஏஞ்சினான் ஆகியோரின் தந்தை ஆனான். இந்திரன் மேகங்களை திரட்டி மழையைப் பெய்பவன் போல ஜீயசும் மேகங்களைத் திரட்டுபவன் என்று அழைக்கின்றனர். இதனால் ஜீயசை வானங்களின் தந்தை என்ற பொருளில் பாகால் ஷாமின் என்பர்..
இந்திர விழாவும் மழை வளமும்
ஆற்று நீர் வழிபாடும் மழை நீர் வழிபாடும் இடிமழைக்குரிய இந்திரன் வழிபடும் காலப்போக்கில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்ததை இந்திரா விழா உணர்த்துகிறது. இவ்விழா பற்றித் தமிழில் தோன்றிய இரட்டை காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாக எடுத்துரைக்கின்றன.
மழைக் கடவுளான இந்திரனின் மகேந்திர மலை கடல்களுக்கு உட்பட்ட குமரிக் கண்டத்தில் இருந்த குமரிமலை என்று நம்பப்படுகிறது. இதனால் நதிகள் கடலில் சங்கமமாகும் ஊர்களில் மழை வழிபாட்டுச் சடங்குகள் பெரிய விழாக்களாக நடைபெற்றன. காவிரி கடலில் சங்கமமாகும் இடத்தில் உள்ள புகார் நகரில் இந்திர விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டது.
மழைச் சடங்குகள் செய்யாமல் மழை கடவுளை வணங்காமல் பின்னால் கடவுளின் கோபத்துக்கு உள்ளாகி அந்நாட்டில் மழை பெய்யாது என்பது ஓர் நம்பிக்கை ஆகும்.
இந்திரவிழா கொண்டாடப்படாத போது நாட்டில் வறட்சி ஏற்பட்டதாகவும் காப்பியங்கள் கூறுகின்றன. இந்திர விழாவை கொண்டாடாத காரணத்தினால் புகாரை கடல் கொண்டதாகவும் நம்பிக்கை நிலவியது. இந்நம்பிக்கை ஆதிகாலத்து மக்கள் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது.
மதுரையிலும் வைகை நதிக்கரையில் இந்திரவிழா கொண்டாடப்பட்ட செய்திகள் உண்டு. எனவே, மழை கடவுளான இந்திரன் விண்ணவர் கோமானாகப் போற்றப்பட்டான். இந்திர விழாவிற்கு தேவர் முப்பத்து மூவர் வந்திருந்து சிறப்புச் செய்தனர். பசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், ருத்திரர் 11 பேர், மருத்துவர் இருவர் என 33 தேவர்கள் 18 தேவகணத்தார் வந்தனர். இந்திரவிழா நடைபெற்ற நாளன்று தேவலோகத்தில் இந்திரனின் பட்டணமான அமராவதி நகரமே காலியாகி விட்டதுபோல் தோன்றும்படி அனைத்துத் தேவர்களும் பூம்புகார் வந்துவிட்டனர். இந்திரவிழா எடுத்ததன் நோக்கத்தை…
‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி’
– என்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்துகின்றன.
இவ்வாறு உலகெங்கும் வேளாண் குடிமக்கள் தண்ணீரை மழை, ஆறு என்ற நிலைகளில் தனித் தெய்வம் சமைத்து வழிபட்டனர்.
முனைவர் செ. ராஜேஸ்வரி
