சென்னை: சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ள கோடைகால சிறப்பு பயிலரங்குகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் பல்வேறு பயிலரங்குகள் நடைபெறும். அந்த வகையில், சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இந்த ஆண்டுக்கான கோடைகால சிறப்பு முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் 8 வகையான பயிலரங்குகள் நடைபெற உள்ளது.அட்டவணையின்படி, மே 5, 6ம் தேதி ரோபோட்டிக்ஸ் பயிலரங்கம், மே 7, 8ம் தேதி 3டி அச்சிடல் தொழில்நுட்பப் பயிலரங்கம், மே 12, 13ம் தேதி செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம், மே 14, 15ம் தேதி ரோபோட்டிக்ஸ் & டிரோன் பயிலரங்கம், மே 16ம் தேதி போல்ட்ஸ்கோப் பயிலரங்கம், மே 19ம் தேதி ராக்கெட் தயாரிப்பு பயிலரங்கம், மே 20ம் தேதி தொலைநோக்கி பயிலரங்கம், மே 21 முதல் 23 வரை அறிவியல் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிலரங்கில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் அதிகபட்சம் 50 மாணவர்கள் வரை கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 5 அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்; ஒவ்வொரு பயிலரங்கிலும் கலந்துகொள்ள முதலில் விண்ணப்பிக்கும் முதல் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கணினி தேவைப்படும் பயிலரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இணைய வசதியுடன் கூடிய மடிக்கணினியை எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிலரங்கத்தில் கலந்துகொள்ள ஒவ்வொரு பயிலரங்கத்திற்கும் வெவ்வேறு விதமான பயிற்சி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிலரங்கத்தில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் www.tnstc.tn.gov.in என்ற இணையதளத்தில் https://forms.qle/2PSp37GY2rkSzyqw7 இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
