சென்னை: மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் இந்தியாவிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள் தாமதமாக வந்தடைவதால் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகி உள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களை 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டீ கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் என பல வணிகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளதால் வெளியூர்களில் தங்கி வேலை செய்து வருபவர்கள் பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்நிலையில் தான் எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக பிஎன்ஜி அதாவது பைப்ட் நேச்சுரல் கேஸ் (Piped Natural Gas) இணைப்பை பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பிஎன்ஜி என்பது குழாய் வழியே நேரடியாக வீட்டிற்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு ஆகும். இதில் சிலிண்டர் காலியாகி விடும் என்ற பயமின்றி, 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கேஸ் கிடைக்கும். இது காற்றை விட லேசான இயற்கை வாயு என்பதால், கசிவு ஏற்பட்டாலும் விரைவாக காற்றில் கலந்து விடும் என்பதால் பாதுகாப்பான தேர்வாக இருக்கும். எவ்வளவு பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப மாத இறுதியில் கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது தான் இதன் முக்கிய சிறப்பம்சம்.
சமயலறைகளில் பெரிய சிலிண்டர்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனிடையே சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிஎன்ஜி இணைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் வீட்டு உபயோக சிலிண்டர்களை விட மாதத்திற்கு சுமார் 20% வரை செலவு குறையும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 8.8 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வழங்க, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த வசதி முக்கியமாக சென்னை, ஆவடி, தாம்பரம் போன்ற பகுதிகளில் கிடைக்கிறது. புதிய இணைப்பிற்கு, உள்ளூர் எரிவாயு விநியோகஸ்தரின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் வழக்கமான LPG சிலிண்டர்களுக்கு மாற்றாக இது பாதுகாப்பான மற்றும் நம்பகமான மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த முறையில் பூமிக்கடியில் குழாய்கள் மூலம் நேரடியாக எரிவாயு வழங்குவதால், இடையறாத மற்றும் பாதுகாப்பான விநியோகம் உறுதி செய்யப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
