பச்சைக் கற்பூரம்
கற்பூரத்தில் ஒருவகையான பச்சை கற்பூரத்தை மருந்தாகவும் இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருளாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது நல்ல வலி நிவாரணி என்பதால், தைலங்களில் பயன்படுத்தப்பட்டது. சளி தொல்லையிலிருந்து விடுபடவும், வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுபடவும், பச்சைக் கற்பூரம் உதவுகிறது. இனிப்பு பலகாரங்களை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட அதில் கற்பூரத்தை சேர்த்து தயாரித்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எவ்வித பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை தொற்றுகள் இருக்காது. பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதம் பச்சைக் கற்பூரம் சாற்றப்படுகிறது. ஆனாலும், எந்த பாதிப்பும் இல்லை. பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்ட பெருமாளை தரிசிக்க, தினசரி லட்சக் கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து, வாழ்வில் திருப்பங்கள் பெற்று செல்கின்றனர்.
பண வரவு உண்டாக…
ஒரு மஞ்சள் துணியில் பச்சைக் கற்பூரத்தை முடிச்சாக கட்டி, குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணவரவு அதிகரிக்கும். வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் பணப்புழக்கம் அதிகரிக்க, பணப்பெட்டியில் பச்சைத் துணியில் சிறிது பச்சைக் கற்பூரம் ஏலக்காய் சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணப்பெட்டியில் பணம் மளமளவென பெருகுவதைக் காணலாம். பச்சைக் கற்பூர வாசனைக்கு கட்டுப்பட்டவள், மகாலட்சுமி.
வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய…
வெள்ளிக்கிழமை தோறும், பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு சிறிய சிவப்பு அல்லது பச்சைத் துணியில் மூன்று பச்சை கற்பூரத்தை வைத்து முடிந்து அதை கையில் வைத்துக்கொண்டு மனதார ஏதேனும் மகாலட்சுமி மந்திரத்தை 21 தடவை கூற வேண்டும் அல்லது மகாலட்சுமியை நமஹ என்று 21 தடவை கூறலாம். இல்லையெனில், மகாலட்சுமியை மனதார வேண்டி எங்களது இல்லத்தில் அதிக செல்வம் சேரவேண்டும், இருக்கின்ற செல்வம் நிலைக்க வேண்டும் எனகூறி அந்த பொட்டலத்தை பணப் பெட்டியில் வைக்கவும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பழைய பொட்டலத்தை மாற்றி புதியதாக வைக்கவும் அப்படி மாற்றும்போது அதில் உள்ள பச்சை கற்பூரத்தை வீட்டில் எரிய விடுவது நன்று. இதன் மூலம் மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
தங்கம் சேர…
காப்பர் அல்லது கண்ணாடி பவுலில் கொஞ்சம் பச்சை கற்பூரம், அதனுடன் சிறிது துளசி, 2 கிராம்பு போட்டு வீட்டில் தங்கம் வைக்கும் இடத்தில் (1 கிராம் தங்க நகையாக இருந்தாலும் பரவாயில்லை) இதை வைத்து விடவும். தங்க நகைகள் வீட்டில் அதிக அளவு சேரும். அடிக்கடி பழையதை மாற்றி மீண்டும் புதிதாக வைக்கவும்.
விரயம் ஏற்படாமலிருக்க…
இயற்கையாகவே பச்சை கற்பூரத்துக்கு செல்வத்தை வீட்டில் தங்கச் செய்யும் ஆற்றல் இருக்கின்றது. அதனால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாத நிலை உருவாகும். வீண் செலவு இருக்காது. பச்சை கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசனைகளையும் சக்திகளையும் இது தடுத்து நிறுத்தி, வளத்தைக் கூட்டும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து, உங்களது பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பணம் செலவானாலும், வரவும் இருந்து கொண்டே இருக்கும்.
மன நிம்மதி ஏற்பட…
2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து முறையாக வழிபடுங்கள் அப்படி பூஜை அறையில் வைப்பதால், வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். ஒருவருக்கு மன நிம்மதி இல்லாமல் போவதற்கு காரணமே வீட்டில் இருக்கக்கூடிய துர்சக்திகள்தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும், துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறிவிடும். அதனால் எப்போதும் மன நிம்மதி இருக்கும்.
வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்பட…
வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் பச்சைக் கற்பூரத்தை இடம்பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வங்களையும் மனதார வணங்கி, நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து, அந்த பச்சைக் கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால், நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி நிம்மதியான வாழ்க்கை நிலையாக அமைந்துவிட்டால், துன்பங்கள் தூர விலகிவிடும். இன்பங்கள் என்றென்றும் நீடித்திடும். சுபிட்சங்களைப் பெற்றிட சூட்சுமங்களை உணர்ந்து கொண்டால், மாட்சிமை பெற்றிடலாம். மங்களகரமான வாழ்க்கை மணம் வீசட்டும் செல்வ செழிப்பான வாழ்க்கை சீரோடு அமையட்டும்.
