கஞ்சா விற்பனையில் கெத்து காட்டிய சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 8 பேர் கைது

சென்னை: மதுரவாயல் அருகே உள்ள புளியம்பேடு பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக அம்பத்தூர் துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 8 பேரை போலீசார் பிடித்தனர். இதையடுத்து மதுரவாயல் போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா இருந்த வீடு, நெற்குன்றத்தை சேர்ந்த சரவணக்குமார்(40) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இந்த வீட்டை 15 ஆயிரம் கொடுத்து சிதம்பரத்தை சேர்ந்த ஹரி(28) டிராவல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்து ஆந்திராவிலிருந்து வரும் கஞ்சாவை பிரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்துள்ளனர்.

போலீசார் சோதனை செய்தபோது, கஞ்சா வாங்க வந்த தஞ்சாவூர்  பாபநாசம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெய்சூர்யா(24), சஞ்சய்(20), மதுரையை சேர்ந்த ஸ்ரீநாத்(21), சிதம்பரம் கடவாச்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார்(18), வண்டலூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பிரசாந்த்(19),  திருவாரூரை சேர்ந்த சரத்குமார்(27), ஆவடியை சேர்ந்த 5வது பட்டாலியனில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலதா மகனும் கல்லூரி மாணவனுமான அருண்(20), தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவன் சேரன்(22) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

220 கிலோ கஞ்சா பறிமுதல்

புனித தோமையார் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் நெசப்பாக்கம் சந்திப்பு அருகே சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஆந்திர பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்தது. காரில் வந்த புழல் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த சேதுராமன்(49), செங்குன்றம், சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(40) ஆகியோரை கைது செய்து 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>