பெங்களூரு: கர்நாடகாவில் 21 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், தனது வகுப்புத் தோழியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜ நிர்வாகியின் மகன் ஆவார். இவர்களது மாணவர் – தோழி உறவின் காரணமாக அந்த பெண்ணிற்கு தற்போது 10 மாத கைக்குழந்தை உள்ளது. போதிய வருமானம் மற்றும் வாழ்வாதாரம் இல்லாத நிலையில், தனக்கு நேர்ந்த அநீதி குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் மீதான கிரிமினல் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி அந்த மாணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று முன் தினம் விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ஒரு நிபந்தனையுடன் கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தார். அதில், ‘மனுதாரர் அல்லது அவரது பெற்றோர் இணைந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குழந்தைக்கும் மாதந்தோறும் 75,000 ரூபாயை பராமரிப்புச் செலவாக வழங்க வேண்டும். இந்த தொகையை அடுத்த விசாரணைத் தேதி வரை தவறாமல் செலுத்த வேண்டும். சாதாரண சூழலில் இந்த வழக்கிற்கு முழுமையான தடை விதித்திருக்கலாம். ஆனால் 10 மாத குழந்தையுடன் அந்த பெண் தவிப்பதால் இந்த மனிதாபிமான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று நீதிபதி தெரிவித்தார்.
