×

டான்பெட் நிறுவனம் தகவல் உரிமை சட்டத்தில் வருவதால் தகவல்களை அளிக்க மறுத்த பொது தகவல் அதிகாரி உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டான்பெட் நிறுவனத்துக்கு பொது தகவல் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளதால் தகவல் உரிமை சட்டத்தில் தகவல்களை தர மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம் எனும் டான்பெட் நிறுவனத்திற்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஜோதிபாசு என்பவர் விண்ணப்பம் அளித்திருந்தார். அதில் டான்பெட் நிறுவனம் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து உரம் கொள்முதல் செய்கிறது, எந்த முறையின் அடிப்படையில் உரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

அவற்றின் விலை உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த டான்பெட் நிறுவனத்தின் பொது தகவல் அதிகாரி, கூட்டுறவு சங்கங்கள் தகவல் உரிமை சட்டத்தில் வராது என கூறி விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்த மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, டான்பெட் நிறுவனத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரியும், தனது விண்ணப்பத்தில் கோரிய தகவல்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரியும் ஜோதிபாசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, டான்பெட் நிறுவனம் தமிழக அரசின் நிர்வாகத்தில், நிதியில், கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் அதிகாரியை மாநில அரசுதான் நியமிக்க வேண்டும். இந்த நிறுவனத்துக்கும் தகவல் உரிமை சட்டம் பொருந்தும். எனவே, தகவல் வழங்க மறுத்த தகவல் அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. டான்பெட் நிறுவனத்துக்கு பொது தகவல் அதிகாரியை நியமித்து 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் வழங்க மறுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறிய நீதிபதி, 4 வாரங்களில் மனுதாரர் கோரிய விவரங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Danpet Company ,Court ,Chennai ,Madras High Court ,Tamil Nadu government ,Tamil Nadu Cooperative Marketing Federation Company ,
× RELATED பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள...